100-லிருந்து 125 நாட்களாக உயர்வு: புதிய ‘விபி ஜி ராம் ஜி’ கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் இன்று முதல் அமல்!
புதுடெல்லி: இந்திய கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ஆண்டுக்கு 125 நாட்கள் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் புதிய ‘விக்சித் பாரத் - ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத இயக்கம்’ (VB-GRAM G) இன்று (ஜூலை 1) முதல் நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது.
இதுவரை நடைமுறையிலிருந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்குப் (MGNREGA) பதிலாக, இந்த புதிய சட்டத்தை மத்திய அரசு இயற்றியுள்ளது. இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
"இது வெறும் சட்டமல்ல, தொழிலாளர்களின் கண்ணியம்" - சிவராஜ் சிங் சவுகான்
புதிய திட்டம் அமலுக்கு வந்தது குறித்து மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தனது அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"இன்றைய நாள் வரலாற்றுச் சிறப்புமிக்க, முன்னெப்போதும் இல்லாத ஒரு நாளாகும். பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், 'விபி ஜி ராம் ஜி' திட்டம் இன்று முதல் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இது வெறும் ஒரு சட்டம் மட்டுமல்ல; லட்சக்கணக்கான கிராமப்புற தொழிலாளர் சகோதர - சகோதரிகளின் கண்ணியம், சுயமரியாதை மற்றும் பாதுகாப்பான வாழ்வாதாரத்தை உறுதி செய்வதில் எழுதப்பட்டுள்ள ஒரு புதிய அத்தியாயமாகும். இனி, கிராமப்புறக் குடும்பங்கள் 100 நாட்கள் அல்லாமல், ஆண்டுக்கு 125 நாட்கள் வேலைவாய்ப்புக்கான சட்டபூர்வ உரிமையைப் பெறுவார்கள்."
மேலும், இத்திட்டம் கிராமங்களில் புதிய வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குவதோடு, நிலையான சொத்துக்களை உருவாக்கவும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும், சுயசார்பு கொண்ட கிராமப்புற இந்தியாவை உருவாக்கவும் புதிய உத்வேகத்தை அளிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புதிய திட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள 5 முக்கிய மாற்றங்கள்:
முன்பிருந்த தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துடன் ஒப்பிடுகையில், தற்போது அமலுக்கு வந்துள்ள புதிய சட்டம் 5 அடிப்படை மற்றும் கட்டமைப்பு மாற்றங்களைக் கொண்டுள்ளது:
வேலைநாட்கள் அதிகரிப்பு: கிராமப்புற தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு வழங்கப்பட்டு வந்த 100 நாட்கள் வேலைவாய்ப்பு, இனி 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
வேளாண் இடைவேளை (Agricultural Pause): விவசாயச் சங்கங்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, பயிர்ச் சாகுபடி மற்றும் அறுவடைக் காலங்களில் நிலவும் கூலித் தொழிலாளர் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் 'வேளாண் இடைவேளை' முறை புதிய திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மாற்றப்பட்ட நிதிப் பங்கீடு: இதுவரை முற்றிலும் மத்திய அரசின் 100% நிதிப் பங்களிப்புடன் நடத்தப்பட்ட இத்திட்டம், இனி மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான 60:40 என்ற நிதிப் பங்கீட்டுடன் செயல்படுத்தப்படும்.
வறுமை அடிப்படையிலான நிதி ஒதுக்கீடு: மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு என்பது இனி வெறும் கோரிக்கையின் அடிப்படையில் அல்லாமல், அந்தந்த மாநிலங்களின் உண்மையான வறுமை நிலையை (Poverty Index) அடிப்படையாகக் கொண்டு விஞ்ஞானப்பூர்வமாகத் தீர்மானிக்கப்படும்.
ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சி: இத்திட்டத்தின் அனைத்துப் பணிகளும், கிராமங்களின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் ‘விக்சித் கிராமப் பஞ்சாயத்து’ திட்டத்தின் கீழ் முழுமையாக ஒருங்கிணைக்கப்படும்.
ஜூலை 2026 முதல் அமலுக்கு வந்துள்ள இந்த அதிரடித் திட்டம், இந்தியக் கிராமங்களின் பொருளாதார அமைப்பில் ஒரு புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

AthibAn Tv