
போலீஸ் அத்துமீறலில் கறுப்பின இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக அமெரிக்காவில் நடந்து வந்த வன்முறை சம்பவங்கள் தணிந்தது. அதே நேரத்தில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் போராட்டங்கள் தொடர்கின்றன.
மின்னபொலிசில், போலீஸ் அதிகாரி ஒருவர் முழங்காலால் கழுத்தில் நெருக்கியதில், ஜார்ஜ் பிளாய்டு என்ற கறுப்பின இளைஞர், சமீபத்தில் உயிரிழந்தார்.அதைத் தொடர்ந்து, இனவெறி தாக்குதலைக் கண்டித்து, நாடு முழுதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக வன்முறை சம்பவங்கள் நடந்து வந்தன. இம்மக்களுக்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்தனர். உலகம் முழுதும் கண்டன போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், அமெரிக்க போராட்டக்காரர்களின் கோபம் குறைந்து, வன்முறை சம்பவங்கள் தணிந்துள்ளன.நேற்று முன்தினமும், அமெரிக்காவின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்தன. பெரும்பாலான போராட்டங்கள் அமைதியாக, பிளாய்டுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இரங்கல் பேரணியாக நடந்தன.அதே நேரத்தில், இனவெறி நடவடிக்கைகளைக் கண்டித்து, போராட்டங்களில் ஈடுபட்டோர் கோஷம் எழுப்பினர். ஒரு சில இடங்களைத் தவிர, பெரும்பாலும் போராட்டங்கள் அமைதியாக நடந்தன. வன்முறையைத் தொடர்ந்து அமல்படுத்தியிருந்த ஊரடங்கு உத்தரவை, பெரும்பாலான மாகாணங்களும், நகரங்களும் விலக்கி கொண்டுள்ளன.கடந்த சில நாட்களாக நடந்த போராட்டங்கள், பேரணிகளைவிட, நேற்று முன்தினம் நடந்த போராட்டங்களில் மக்கள் அதிகளவில் பங்கேற்றனர்.
கடந்த சில நாட்களாக போராட்டங்களில் பதற்றம் நிலவி வந்த நிலையில், அது குறைந்து, மக்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமாகவே அமைந்திருந்தது.இந்தப் போராட்டங்களால், 'கொரோனா' வைரஸ் வேகமாக பரவக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது. அதனால், போராட்டத்தில் ஈடுபட்டோர் பெரும்பாலானோர், முக கவசம் அணிந்திருந்தனர்.வடக்கு கரோலினாவில், ஜார்ஜ் பிளாய்டு உடலைப் பார்ப்பதற்காக அதிக மக்கள் கூடியிருந்தனர். நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து, மக்கள் அஞ்சலி செலுத்தினர். அடுத்ததாக ஹூஸ்டனுக்கும், அதை தொடர்ந்து மின்னபொலிசுக்கும், மக்கள் அஞ்சலிக்காக அவருடைய உடல் எடுத்துச் செல்லப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சியாட்டிலில் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதால், போலீசார் மிளகு துாளை துாவி கலைத்தனர். விரிஜினியாவில், 1891ல் நிறுவப்பட்டிருந்த, வெள்ளை நிறத் தலைவர்கள் சிலருடைய சிலைகள் வீழ்த்தப்பட்டன.இதுபோன்று, ஒரு சில அசம்பாவித சம்பவங்கள் மட்டுமே நடந்தது. மேலும், கைது செய்யப்படுவதும் குறைந்துள்ளது.தலைநகர் வாஷிங்டனில், அதிபரின் வெள்ளை மாளிகை அருகே, மக்கள் அதிகளவில் கூடி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனால், வெள்ளை மாளிகைக்கு செல்லும் சாலை மூடப்பட்டது. 'எதிர்பார்த்ததைவிட கூட்டம் குறைவு' என, அதிபர், டொனால்டு டிரம்ப், சமூக வலை தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.சான்பிரான்சிஸ்கோவின் கோல்டன் கேட் பிரிட்ஜ், நியூயார்க்கின் புரூக்ளின் பிரிட்ஜ் என, நாட்டின் பல முக்கிய இடங்களில், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


AthibAn Tv