Type Here to Get Search Results !

''இந்தியாவில் கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை 'ஆயுஷ்மான் பாரத்' காப்பீட்டு திட்டத்தை விரைவுபடுத்துவதற்கான வாய்ப்பாக பார்க்கலாம்''

latest tamil news

''இந்தியாவில் கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை 'ஆயுஷ்மான் பாரத்' காப்பீட்டு திட்டத்தை விரைவுபடுத்துவதற்கான வாய்ப்பாக பார்க்கலாம்'' என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனோம் கேப்ரியாசெஸ் கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.36 லட்சத்தை தாண்டியுள்ளது; பலி எண்ணிக்கை 6642 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் வைரசால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் நேற்று கூறியதாவது: கொரோனா வைரஸ் பரவலை நிச்சயமாக யாரும் விரும்ப மாட்டார்கள். இது பல நாடுகளுக்கு சவாலான விஷயமாக உள்ளது. அதேசமயம் அதிலுள்ள வாய்ப்புகளையும் நாம் பார்க்க வேண்டும்.

உதாரணத்திற்கு இந்தியாவை எடுத்துக் கொண்டால் வைரசால் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி நிலையை ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டத்தை விரைவுபடுத்துவதற்கான வாய்ப்பாக பார்க்கலாம்; குறிப்பாக ஆரம்ப சுகாதார சேவையில் கவனம் செலுத்தலாம்.இந்திய அரசு ஆயுஷ்மான் பாரத் திட்ட நடைமுறைகளை விரைவுபடுத்துவதில் உறுதியாக இருப்பதை நான் அறிவேன். இந்தியாவில் வைரசால் ஏற்படும் மோசமான நிகழ்வுகள் விரைவில் கட்டுப்படுத்தப்படும் என நம்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

பின் உலக சுகாதார அமைப்பின் மூத்த அதிகாரி மைக்கேல் ரியான் கூறியதாவது:இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இரட்டிப்பாகும் காலம் மூன்று வாரங்களாக உள்ளது. இங்கு வைரஸ் அதிவேகமாக பரவவில்லை; ஆனால் வளர்ந்து வருகிறது. இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் வைரஸ் பாதிப்புகள் வெவ்வேறு விதமாக உள்ளது. நகர்ப்புறங்களில் ஒரு விதமாகவும் கிராமப்புறங்களில் ஒரு விதமாகவும் உள்ளது. தெற்காசியாவில் இந்தியாவில் மட்டுமல்லாமல் பாகிஸ்தான் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலும் வைரஸ் தொற்று தீவிரமடையவில்லை. எனினும் அது நடக்கும் ஆபத்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.