
தமிழக அமைச்சரவை கூட்டம், இன்று(ஜூன் 15) நடக்க உள்ளது. கூட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கை உட்பட, பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
தமிழகத்தில், ஜூன், 30 வரை, ஊரடங்கு அமலில் இருந்தாலும், மக்களின் வாழ்வாதாரத்திற்காக, அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்நிலையில், சென்னை உட்பட சில மாவட்டங்களில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, தினமும் அதிகரித்தபடி உள்ளது.
சென்னையில் நோய் பரவலை தடுக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும், இதுவரை பலன் அளிக்கவில்லை.எனவே, நோய் பரவலை தடுக்க, சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்தது; அதை, அரசு ஏற்கவில்லை. 'முழு ஊரடங்கு என, வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், இன்று காலை, 11:00 மணிக்கு, தலைமை செயலகத்தில், மருத்துவ நிபுணர் குழுவுடன், முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார். அதில், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில், கொரோனா நோய் பரவலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
தொடர்ந்து, பகல், 12:00 மணிக்கு, முதல்வர் இ.பி.எஸ்., தலைமையில், அமைச்சரவை கூட்டம் நடக்க உள்ளது. கூட்டத்தில், மருத்துவ நிபுணர் குழுவின் ஆலோசனை; மருத்துவ படிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க, அவசர சட்டம் கொண்டு வருவது; கல்லுாரி செமஸ்டர் தேர்வு; புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து ஆலோசித்து, முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.


AthibAn Tv