
இந்தியா - நேபாளம் இடையேயான உறவை உலகில் எந்த சக்தியாலும் முறிக்க முடியாது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
இந்திய பகுதிகளை உள்ளடக்கி நேபாளம் புதிய வரைபடம் வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வரைபடத்திற்கு ஒப்புதல் அளிக்க வகை செய்யும் அரசியல் சாசன திருத்த மசோதா சமீபத்தில் நேபாள நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேறியது. ஆனால், இதனை ஏற்க மறுத்த இந்தியா, ‛இது வரலாற்று உண்மைகள் அல்லது ஆதாரங்களின் அடிப்படையில் இல்லாத ஒருதலைப்பட்ச செயல்,' என கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், பாஜ.க தொண்டர்களுக்கு டிஜிட்டல் முறையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவுக்கும் - நேபாளத்திற்கும் இடையே பிரச்சினை இருந்தால் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்போம். பார்டர் ரோடு அமைப்பால் (BRO) லிபுலேக் வரை இணைப்பு சாலை உருவாக்கப்பட்டுள்ளது. இது மன்சரோவருக்கு ஒரு புதிய வழியைக் கொண்டு வந்துள்ளது. 80 கி.மீ நீளமுள்ள சாலை, இது இந்திய பிராந்தியத்தில் கட்டப்பட்டுள்ளது.
இந்த சாலை தொடர்பாக நேபாளத்தில் சில தவறான கருத்துக்கள் எழுந்துள்ளன. ஆனால் நேபாளத்தைப் பொருத்தவரை, அவர்களுடன் சமூக, புவியியல், வரலாற்று அல்லது கலாச்சார உறவுகள் மட்டுமல்ல, பக்தி உறவும் இருக்கிறது என்று நான் கூற விரும்புகிறேன். இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான உறவு சாதாரணமானது அல்ல. உணவாலும் உணர்வாலும் அது பிணைக்கப்பட்டுள்ள இந்த உறவை எந்த சக்தியாலும் முறிக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.


AthibAn Tv