கொரோனா ஊரடங்கு காரணமாக உலகம் முழுவதும் சினிமாத் துறைக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. அவை மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து உறுதியான எந்தத் தகவலும் இல்லை.
சில வாரங்களுக்கு முன்பு ஒரு சில நடிகர்கள் தங்களது சம்பளத்தைக் குறைத்துக் கொள்வதாக அறிவித்தனர். ஆனால், அவர்களில் யாரும் முன்னணி நடிகர்கள் இல்லை. விஜய் ஆண்டனி மட்டுமே ஒரு சில கோடிகளில் சம்பளம் வாங்குபவர். மற்றவர்கள் லட்சங்களில் வாங்குபவர்கள் மட்டுமே.
ஆனால், சமீபத்தில் நட்சத்திர அந்தஸ்திற்கு உயர்ந்த சிவகார்த்திகேயனிலிருந்து என்றென்றும் உச்ச அந்தஸ்தில் இருக்கும் ரஜினிகாந்த் வரையில் உள்ள 10 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர்கள் யாரும் இதுவரையிலும் தாங்கள் சம்பளத்தைக் குறைத்துக் கொள்கிறோம் என்று அறிவிக்கவில்லை.
சமீபத்தில் நடந்த வருமான வரி சர்ச்சையின் போது 'மாஸ்டர்' படத்திற்காக விஜய்க்கு 80 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாக ஒரு தகவல் வெளியானது. ரஜினிகாந்த் சம்பளம் நிச்சயம் அதற்குக் குறைவில்லாமல் தான் இருக்கும். கமல்ஹாசன், அஜித் ஆகியோருடைய சம்பளம் விஜய்யின் சம்பளத்தை விட சில பல கோடிகள் குறைவு என்கிறார்கள்.
அவர்களுக்கு அடுத்து சூர்யா, கார்த்திக், விக்ரம், தனுஷ், சிம்பு விஜய் சேதுபதி, ஜெயம் ரவி என அடுத்தடுத்த கட்டங்களில் உள்ள நடிகர்கள் யாரும் அவர்களது சம்பளத்தைக் குறைக்கிறோம் என்று இன்னமும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
மேலே குறிப்பிட்டவர்கள் அல்லாது அடுத்த கட்டத்தில் உள்ள ஒரு நடிகரிடம் கூட சமீபத்தில் புதிய படத்திற்காகப் பேசினார்களாம். அவர் வழக்கமாக வாங்கும் சம்பளத்தைவிட அதிகமாகக் கேட்டாராம். அதோடு, அதில் பாதியை அட்வான்ஸாகக் கொடுத்துவிட வேண்டும் என்று கறாராகச் சொன்னாராம். இத்தனைக்கும் அவருடைய சமீபத்திய படம் வெற்றி பெறவில்லை. கொரோனா ஊரடங்கில் சினிமாவே தடுமாறிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் கூட இப்படி கேட்கிறாரே, அப்புறம் எப்படி சினிமா வளரும் என அவரை 'புக்' செய்யச் சென்றவர்கள் புலம்பிக் கொண்டே சென்றார்களாம்.
நடிகர்கள் சம்பளத்தைக் குறைத்தாலே போதும் ஒரு படத்தின் பட்ஜெட்டில் மூன்றில் ஒரு பங்கு குறைந்துவிடும். அதன்பின் அந்தப் படத்தை நியாயமான லாபத்திற்கு வைத்து விற்க வேண்டும். அதற்கேற்றபடி தியேட்டர்களில் கட்டணத்தை வசூலிக்க வேண்டும். அப்படியிருந்தால்தான் மக்கள் கொரோனா பிரச்னை முடிந்த பின்னும் தியேட்டர்களை நோக்கி வருவார்கள்.
தியேட்டர்களில்தான் தங்களது ஹீரோயிசத்தை ரசிகர்கள் ஆர்ப்பரித்து ஆரவாரம் செய்து ரசிப்பார்கள். அந்த ரசனைக்கு ஈடு இணை வேறு எதுவும் இல்லை என்று நினைக்கும் ஹீரோக்கள் அப்படி தொடர்ந்து ரசிகர்கள் தங்களது படங்களை வந்து பார்க்க வேண்டும் என்று நினைத்தால் சம்பளத்தை உடனடியாகக் குறைக்க வேண்டும். இல்லை என்றால் வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டு 50 நாட்கள் கழித்து கூட அவர்களது படங்களை ஓடிடி தளத்தில் பார்த்தால் போதும் என நினைக்க ஆரம்பித்துவிடுவார்கள் என ஒரு மூத்த சினிமா அனுபவஸ்தர் நம்மிடம் தெரிவித்தார்.
சினிமா உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் தியேட்டர்களுக்கு மக்கள் வர வேண்டும். மக்கள் வந்தால்தான் திரைப்படங்களை உருவாக்க புதிது புதிதாக தயாரிப்பாளர்கள் வர முடியும். நியாயமான பட்ஜெட்டில் நிலையான வருவாயை சினிமா தொழிலில் ஈட்ட வேண்டும் என்றால் ஹீரோக்களும் அவர்கள் வாங்கும் கோடிகளில் சில கோடிகளை குறைக்க வேண்டும். இல்லையேல், தியேட்டர்களைக் குறைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதே தற்போதைய நிலைமை.
அப்படி ஒரு நிலைமை வராமலிருக்க, யார் முதலில் மனமுவந்து தங்களது சம்பளத்தைக் குறைக்கப் போகிறார்கள் என சினிமாவில் உள்ளவர்களே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.


AthibAn Tv