
பீகார் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் பா.ஜ., மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று பிரசாரத்தை துவக்கினார். கட்சிகள் மத்தியில் முதன்முறையாக அமித்ஷா துவக்கி உள்ள டிஜிட்டல் பிரசாரத்தை மாநில முக்கிய எதிர்கட்சியான ராஷ்ட்டிரிய ஜனதா தளம் குறை கூறியுள்ளது.
பீகார் மாநில தேர்தல் விரைவில் நடக்கவுள்ளது. தற்போது இங்கு பா.ஜ., நிதீஷ்குமாரின் கட்சி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கென பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில் , தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இம்மாநிலத்தில் பாஜ., முதன் முதலாக பிரசாரத்தை துவக்கி உள்ளது. பா.ஜ., மூத்த தலைவர் டில்லியில் இருந்தபடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் டிஜிட்டல் பிரசாரத்தை துவக்கினார்.
இவரது உரையை மாநிலம் முழுவதும் கட்சி தொண்டர்கள் , மக்கள் என ஒரு லட்சம் பேர் வரை இவரது பேச்சை கேட்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:
கொரோனா நடவடிக்கைக்கு பாராட்டு
நாட்டில் கொரோனா பரவல் காரணமாக பலரும் போராடி வருகின்றனர். பிரதமர் மோடி தலைமையிலான அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கொரோனா நடவடிக்கையில் இந்தியாவின் நடவடிக்கையை உலகமே வியந்து பாராட்டியது. கொரோனா போராளிகளுக்கு நான் பாராட்டை தெரிவிக்க கடமை பட்டுள்ளேன். கொரோனா போராளிகள் கடும் முயற்சியினால் நாம் இன்று நலமாக இருக்கிறோம். மக்கள் ஊரடங்கு அறிவித்து பிரதமர் மோடி பெரும் மதிப்பை பெற்றார். ஊரடங்கால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது.
சாதனைகள் பல
மோடி அரசு ஏழைகளுக்கானது. பீகாரில் பலரும் ஏழை மக்களே உள்ளனர். ஒன் ரேசன், ஒன் கார்டு கொண்டு வரப்போகிறோம். இது டிஜிட்டல் இந்தியாவுக்கு எடுத்துக்காட்டு. ராமர் கோயில் விவகாரத்தில் நல்ல தீர்ப்பை பெற்றோம். பல கோடி மக்கள் இலவச சமையல் காஸ் சிலிண்டர்கள் பெற்றனர் . குடியுரிமை சட்ட மசோதாவை கொண்டு வந்தோம்.
கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தோம். அனைவரும் பத்திரமாக சொந்த ஊர் திரும்பி உள்ளனர். இன்று அனைவரும் நலமாக உள்ளனர். கொரோனா ஒழிப்பில் மக்கள் பிரதமர் மோடிக்கு துணையாக நின்றனர். ஆனால் இதனை சிலர் அரசியல் செய்கின்றனர்.
பீகாரில் முதல்வர் நிதீஷ்குமார் அமைதியான முறையில் மக்களுக்கு தேவையானவற்றை நிறைவேற்றி வருகிறார். மக்களுக்கு நன்மை செய்யும் பா.ஜ., தலைமையிலான கூட்டணி ஆட்சி பீகாரில் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.


AthibAn Tv