Type Here to Get Search Results !

அனில் அம்பானியிடம் ரூ.1,200 கோடி வசூலிக்க SBI நடவடிக்கை

நான் ஒரு போண்டியான ராஜா: அனில் ...

தொழிலதிபர் அனில் அம்பானி, தன் நிறுவனங்கள் கடன் பெறுவதற்காக அளித்த, 1,200 கோடி ரூபாய் மதிப்பு உத்தரவாதத்துக்கான தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, எஸ்.பி.ஐ., எனப்படும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் விண்ணப்பித்துள்ளது.
அனில் அம்பானியின், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் இன்ப்ராடெல் ஆகிய நிறுவனங்கள் மீது, பல ஆயிரம் கோடி ரூபாய் வாராக் கடன் தொடர்பாக, வங்கிகள் குழுமம், திவால் நடவடிக்கைக்கு விண்ணப்பித்துள்ளது. இந்நிலையில் அனில் அம்பானி, மேற்கண்ட இரு நிறுவனங்களுக்காக கடன் பெற, 1,200 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை, எஸ்.பி.ஐ., வங்கியிடம், தனிப்பட்ட முறையில், உத்தரவாதமாக அளித்துஇருக்கிறார்.

இதையடுத்து, திவால் சட்டப்படி, இரு நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுத்து, அனில் அம்பானி உத்தரவாதமாக அளித்த சொத்துக்களின் மதிப்பீட்டு தொகையை மீட்டுத் தர வேண்டும் என, எஸ்.பி.ஐ., தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் முறையிட்டுள்ளது.

இது, தொடர்பாக பதில் அளிக்க, அனில் அம்பானிக்கு, தீர்ப்பாயம், ஒரு வாரம் அவகாசம் வழங்கிஉள்ளது. இது குறித்து ரிலையன்ஸ் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:அனில் அம்பானியின் இரு நிறுவனங்கள் தான் கடன் பெற்றுள்ளன; அனில் அம்பானி தனிப்பட்ட முறையில் கடன் பெறவில்லை.

ஏற்கனவே, வாராக் கடன் தொடர்பாக திவால் சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் இன்னும் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.தற்போது உத்தரவாதமாக அளித்த சொத்துக்களின் மதிப்புக்கு நிகரான தொகையை தருவது தொடர்பாக, எஸ்.பி.ஐ., தாக்கல் செய்த மனுவுக்கு, விரைவில் அனில் அம்பானி பதில் அளிப்பார்.இவ்வாறு அவர் தெரிவித்தார். அனில் அம்பானி, கடந்த ஆண்டு வாராக் கடன் தொடர்பாக சிறை செல்லவிருந்த நிலையில், அவரது சகோதரர் முகேஷ் அம்பானி உதவி செய்து, அவரை காப்பாற்றியது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.