
அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி, இந்திய பகுதிக்குள் சீன படைகளின் ஊடுருவல் இல்லை என கூறியது, நமது படையினரின் வீரமான முயற்சியால் நடந்தது. ஆனால் அவற்றை விஷமத்தனமாக திரித்து எதிர்க்கட்சிகள் சர்ச்சையை உருவாக்குகின்றன என பிரதமர் அலுவலகம் விளக்கமளித்துள்ளது.
கிழக்கு லடாக்கில் கால்வான் பள்ளத்தாக்கில் சீன படைகள் உடனான மோதலின் போது 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இது குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை விளக்கமளித்தார். அப்பேச்சின் ஒரு பகுதியாக நமது எல்லைக்குள் யாரும் நுழையவில்லை என பிரதமர் கூறியிருந்தார். இதனை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் எம்.பி., ராகுல், இந்திய எல்லையை சீன ஆக்கிரமிப்புக்கு மோடிக்கு கொடுத்துவிட்டதாக குற்றம்சாட்டியிருந்தார். மேலும் ஊடுருவல் இல்லை என்றால் நம் வீரர்கள் கொல்லப்பட்டது ஏன்? எங்கே அவர்கள் கொல்லப்பட்டார்கள்? என்று இரண்டு கேள்விகளை எழுப்பியிருந்தார். ப.சிதம்பரமும், ஜெய்சங்கரின் அறிக்கையை சுட்டிக்காட்டி, ஊடுருவல் இல்லை என்றால் நிலைமையை மீட்டெடுப்பதை பற்றி அறிக்கை பேசுவது ஏன் என கேட்டிருந்தார்.
இந்நிலையில் இதற்கு விளக்கமளித்து பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது: நமது நடைமுறை எல்லைக் கட்டுபாடு கோடு பகுதியில் சீன துருப்புகள் இல்லை என பிரதமர் கூறியது, நமது ஆயுதப்படைகளின் துணிச்சலான நடவடிக்கைகளை தொடர்புப்படுத்தி தான். 16 பீகார் ரெஜிமென்ட்டின் படையினரின் தியாகங்கள், சீனத் தரப்பினர் கட்டமைப்புகளை அமைப்பதற்கான முயற்சியை முறியடித்ததுடன், அன்றைய தினம் எல்லையில் அத்துமீறலுக்கான முயற்சியையும் அழித்துவிட்டன.
இந்தியப் பிரதேசம் என்றால் என்ன என்பது இந்திய வரைபடத்தில் தெளிவாக உள்ளது. இந்த அரசாங்கம் அதில் வலுவாகவும் உறுதியுடனும் உள்ளது. அனைத்துக் கட்சி கூட்டத்தில், எல்லையில் ஒருதலைப்பட்ச மாற்றத்தை இந்த அரசு அனுமதிக்காது என்பதும் தெளிவுபடுத்தப்பட்டது. நமது துணிச்சலான வீரர்கள் எல்லைகளை பாதுகாக்கும் நேரத்தில், அவர்களின் மன உறுதியைக் குறைக்க தேவையற்ற சர்ச்சை உருவாக்குவது துரதிர்ஷ்டவசமானது. இது போன்ற உள்நோக்கம் கொண்ட பிரசாரங்கள் இந்திய மக்களின் ஒற்றுமையை குறைக்காது. இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

AthibAn Tv