
இந்தியாவுடன் எல்லை பிரச்னையில் மோதலில் ஈடுபட்ட சீனா, நேபாளத்தை தொடர்ந்து, அடுத்ததாக நமது நெருங்கிய நட்பு நாடான வங்கதேசத்தையும் தனது பக்கம் இழுக்க வலை விரித்துள்ளது. அந்நாடு இறக்குமதி செய்த பொருட்களுக்கான தொகையில் 97 சதவீதத்தை தள்ளுபடி செய்துள்ளது.
லடாக்கில் கல்வான் பகுதியில் சீன வீரர்கள் தாக்கியதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனால், எல்லையில் பதற்றம் நிலவும் நிலையில், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில், இந்திய எல்லைக்கு உட்பட்ட லிபுலேக், கலபணி, லிம்பியதுரா ஆகிய பகுதிகளை தம் நாட்டின் எல்லையுடன் உள்ளடக்கி நேபாளம் சட்டம் நிறைவேற்றியது. இதன் பின்னணியில் சீனா உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், சீனா அடுத்ததாக வங்கதேசத்திற்கு வலைவிரித்துள்ளது. வங்கதேசம் இறக்குமதி செய்த 5,161 பொருட்களுக்கு செலுத்த வேண்டிய தொகையில் 97 சதவீதத்தை தள்ளுபடி செய்வதாக சீனா தெரிவித்துள்ளது. தாங்கள் வளர்ச்சி குறைந்த நாடு என்ற அடிப்படையில் சலுகை அளிக்க வேண்டும் என வங்கதேசம் கூறியது. இதனை சீனா ஏற்றுகொண்டு சலுகை அளித்துள்ளது. அதுவும், இந்தியாவுடன் மோதல் நடந்த அடுத்த நாளே இந்த சலுகை அளித்தது. இதனை வங்கதேச வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனாவின் இந்த நடவடிக்கை, வங்கதேசத்தையும் தனது பிடிக்குள் கொண்டு வரும் சீனாவின் திட்டங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த சலுகை காரணமாக, சீனா மற்றும் வங்கதேசம் இடையே உறவு வலுப்பெறும். இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாக நீண்ட காலமாக இருந்து வரும் வங்கதேசம், சீனாவை சற்று தள்ளியே வைத்திருந்தது.

AthibAn Tv