சென்னை தலைமைச் செயலகத்தில் முக்கிய நிகழ்வு: முதலமைச்சர் ஜோசப் விஜய்யுடன் அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் சந்திப்பு!
சென்னை:
தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யை, இந்தியாவுக்கான அமெரிக்க நாட்டு தூதரும், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான சிறப்பு தூதருமான செர்ஜியோ கோர் (Sergio Gor) இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்துப் பேசினார். தமிழகத்தில் புதிய முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, இருதரப்பு உறவுகள் மற்றும் பொருளாதாரக் கூட்டாண்மையை வலுப்படுத்தும் நோக்கில் இந்த உயர்மட்டச் சந்திப்பு நடைபெற்றது.
இருதரப்பு வளர்ச்சி குறித்துக் கலந்துரையாடல்
தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, தமிழகத்தில் அமெரிக்க நிறுவனங்களின் முதலீடுகள், தொழில் நுட்பக் கூட்டாண்மை, கல்வி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இருநாட்டுப் பிரதிநிதிகளும் விரிவாகக் கலந்துரையாடினர்.
உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்பு
பரஸ்பர நட்புணர்வுடன் நடைபெற்ற இந்த முக்கியச் சந்திப்பின் போது, தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் மு.சாய்குமார், பொதுத்துறை முதன்மை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
அமெரிக்கத்தரப்பில், சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதர் மரியானா எல்.நெய்ஷூலர் (Mariana L. Neisuler), சென்னை அமெரிக்க துணைத் தூதரகத்தின் அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரிவின் தலைவர் பிரையன் இ.ஸ்மைஸர், புதுடெல்லியில் உள்ள அமெரிக்க தூதர் அலுவலகத்தின் தலைமை அலுவலர் லிசா ஒய்.பிரவுன் மற்றும் தூதரின் சிறப்பு உதவியாளர் சார்லஸ் வில்லியம் ஹார்டன் உள்ளிட்ட உயர் தூதரக அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


AthibAn Tv