Type Here to Get Search Results !

கடந்த மே 6ம் தேதியே இந்திய வீரர்கள் எல்லை தாண்டியதாக, சீனா அபாண்டமாக குற்றம்சாட்டியுள்ளது.

latest tamil news

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் சீன ராணுவம் கடந்த மாத தொடக்கத்தில் ஊடுருவியதால் இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையே மே 5, 6ம் தேதிகளில் மோதல் ஏற்பட்டது. இதனால் பதற்றத்தை தணிப்பதற்காக இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இதனையடுத்து இரு நாடுகளும் படை விலக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தன. இந்த பணிகளின்போது கடந்த ஜூன் 15ம் தேதி மீண்டும் இருதரப்பும் மோதிக்கொண்டன. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனா ராணுவத்தினர் 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக கூறப்பட்டாலும், சீனா இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க மறுக்கிறது.

இதற்கிடையே இந்திய வீரர்கள் எல்லை தாண்டியதால் தான் மோதல் ஏற்பட்டதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா தொடர்ந்து தன்னிச்சையாக சாலைகள், பாலங்கள் போன்ற கட்டுமானங்களை நடத்தி வருகிறது. இதற்கு சீனா பலமுறை எதிர்ப்பை பதிவு செய்தாலும், இதை கேட்காத இந்தியா, உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியையும் தாண்டி வந்து ஆத்திரமூட்டும் செயல்களை செய்கிறது.

கடந்த மே 6ம் தேதி தடுப்பு வேலிகள் போன்றவை அமைப்பதற்காக கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியை இந்திய வீரர்கள் தாண்டி வந்தனர். இது சீன வீரர்களின் ரோந்து பணிக்கு இடையூறாக அமைந்தது. அங்கு நிலவும் இயல்பு நிலையை குலைப்பதற்கு வேண்டுமென்றே தன்னிச்சையாக முயன்றனர்.

அன்று இருதரப்பு ராணுவ மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் ரோந்து மற்றும் கட்டுமானங்களுக்காக கல்வான் நதிக்கரையை தாண்டமாட்டோம் என இந்தியா உறுதியளித்தது. இதைத்தொடர்ந்து அங்கிருந்து இரு தரப்பும் படைகளை விலக்குவது என முடிவெடுத்தது. ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதமாக ஜூன் 15ம் தேதி இந்திய முன்கள வீரர்கள் மீண்டும் எல்லை தாண்டி வந்து அங்கு தணிந்து இருந்த பதற்றத்தை குலைத்து விட்டனர். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.