"உசுப்பேத்தி விட்டுட்டு உம்முனும் இருக்காதீங்க Bro!" - TNPSC குரூப் 1 காலிப்பணியிட விவகாரத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடல்!
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ள குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பில், வெறும் 26 காலிப்பணியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டு இருப்பது போட்டித் தேர்வர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை உடனடியாக உயர்த்த வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் இந்த விவகாரம் தொடர்பாகத் தற்போதைய அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
"2026-இல் வெறும் 26 காலிப்பணியிடங்களா?"
"தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 2026-ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெறும் 26 காலி பணியிடங்கள் மட்டுமே இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரவும் பகலும் பாராமல், பல மாதங்களாகப் போட்டித் தேர்விற்காகத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டு படித்துக் கொண்டிருக்கும் ஏழை, எளிய மாணவர்களுக்கும் தேர்வர்களுக்கும் இந்த அறிவிப்பு மனதளவில் மிகப்பெரிய சோர்வையும் ஏமாற்றத்தையும் உண்டாக்கும்.
அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் ஒப்பீடு
இதுவரை தமிழ்நாட்டின் அரசுப் போட்டித் தேர்வு வரலாற்றிலேயே, மிக அதிக அளவிலான காலிப்பணியிடங்களை முறைப்படி அறிவித்து நிரப்பியது, நான் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த மாண்புமிகு அம்மா அவர்களின் ஆட்சிக் காலத்தில் தான் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
அம்மா அவர்களின் ஆட்சியில், தமிழ்நாடு தேர்வாணையம் (TNPSC) மூலம் 67,529 பேரும், இதர அரசுத் துறைகள் மூலமாக 1,68,306 பேரும் என மொத்தம் 2,35,835 நபர்களுக்கு அரசுப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டன. அதுமட்டுமின்றி, தமிழ் வழியில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு அரசுப் பணிகளில் 20 விழுக்காடு முன்னுரிமையும், மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை 4 விழுக்காடாக உயர்த்தி வழங்கியதும் அ.தி.மு.க. அரசு தான்.
"கடுப்பேத்தி விட்டுட்டு கம்முனு இருக்காதீங்க"
எனவே, விளம்பரங்களை மட்டுமே நம்பியிருக்கும் இன்றைய 'கவர்ச்சி மாடல்' அரசு, அரசு வேலைக்காகக் காத்திருக்கும் லட்சக்கணக்கான மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, குரூப் 1 தேர்வுக்கான காலி பணியிடங்களின் எண்ணிக்கையை உடனடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதை விடுத்து, 'உசுப்பேத்தி விட்டுட்டு உம்முனும், கடுப்பேத்தி விட்டுட்டு கம்முனும் இருக்காதிங்க Bro!!' என்று தனது பாணியிலான சினிமா வசனத்தைக் குறிப்பிட்டு தற்போதைய அரசை முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் சாடியுள்ளார்.



AthibAn Tv