
இந்தியா - சீனா இடையே நடந்த ராணுவ உயரதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இதனையடுத்து, லடாக்கில் நடந்த மோதலை தொடர்ந்து பிடித்து செல்லப்பட்ட 10 இந்திய வீரர்களை சீன ராணுவம் விடுவித்தது.
லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15ம் தேதி நள்ளிரவு, இந்திய வீரர்களை சீன வீரர்கள் கடுமையாக தாக்கினர். இதனால், இரு தரப்புக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சிலர் காயமடைந்தனர். சீன தரப்பில் 43 பேர் வரை இறந்திருக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த மோதல் காரணமாக எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. மோதலின் போது இந்திய வீரர்களை சீன ராணுவம் பிடித்து சென்றதாக தகவல் வெளியானது. இதனை சீனா மறுத்திருந்தது.
பதற்றத்தை குறைக்க இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில், 4 ராணுவ உயரதிகாரிகள் உட்பட 10 இந்திய வீரர்களை சீன ராணுவம் விடுவித்துள்ளதாகவும், அவர்கள் எந்த துன்புறுத்தலுக்கும் ஆளாகவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.


AthibAn Tv