கேரளாவில் பரபரப்பு: 20 அடி ஆழ வறண்ட கிணற்றுக்குள் விழுந்த குட்டி யானை - 3 மணி நேரம் போராடி மீட்ட வனத்துறை!
பத்தனம்திட்டா: கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே, ரப்பர் தோட்டத்திலிருந்த 20 அடி ஆழமுள்ள வறண்ட கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 வயது குட்டி யானையை, வனத்துறையினர் 3 மணி நேரம் போராடி பத்திரமாக மீட்டனர்.
ரப்பர் தோட்டத்தில் நேர்ந்த விபத்து
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம், தண்ணித்தோடு மேக்கானம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ரப்பர் தோட்டத்தில் தண்ணீர் இல்லாத 20 அடி ஆழ கிணறு ஒன்று உள்ளது. நேற்று அதிகாலை நேரத்தில், அருகில் உள்ள காட்டுப் பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைக் கூட்டம் இந்த ரப்பர் தோட்டத்திற்குள் புகுந்துள்ளது. அப்போது, கூட்டத்தில் இருந்த சுமார் 2 வயது மதிக்கத்தக்க குட்டி யானை ஒன்று, எதிர்பாராதவிதமாக அந்த ஆழமான கிணற்றுக்குள் தவறி விழுந்தது. கிணற்றுக்குள் இருந்து குட்டி யானை பிளிறிய சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள், இது குறித்து உடனடியாக வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
பொக்லைன் உதவியுடன் பாதை அமைத்து மீட்பு
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், குட்டி யானையை மீட்பதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கினர். கிணறு மிகவும் ஆழமாக இருந்ததால், பொக்லைன் எந்திரத்தின் (JCB) உதவியுடன் கிணற்றின் ஒரு பக்கச் சுவரை இடித்து, மண்ணைத் தோண்டி சமப்படுத்தினர்.
யானை தானாகவே நடந்து மேலே ஏறி வருவதற்கு ஏதுவாக ஒரு தற்காலிகப் பாதையை வனத்துறையினர் உருவாக்கினர். சுமார் 3 மணி நேரத் தொடர் போராட்டத்திற்குப் பிறகு, அமைக்கப்பட்ட அந்தப் பாதை வழியாகக் குட்டி யானை மெதுவாக நடந்து கிணற்றை விட்டு வெளியேறியது. மீட்புக் குழுவினரைக் கண்டதும், எவ்வித காயமுமின்றி உற்சாகத்துடன் துள்ளிக்குதித்த குட்டி யானை, நேராகத் தன் தாயைத் தேடிக் காட்டுப் பகுதியை நோக்கி ஓடியது. வனத்துறையினரின் இந்தத் துரித நடவடிக்கைக்குப் பொதுமக்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.


AthibAn Tv