Type Here to Get Search Results !

ஆந்திராவில் ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கடும் பின்னடைவை சந்திப்பு... தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி

 ஆந்திராவில் ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடந்தது. இதில், அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநில அரசுகளின் பதவிக்காலம் கடந்த 2ம் தேதியுடன் முடிவடைந்ததால், அந்த 2 மாநிலங்களுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு, 2ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஆந்திரா, ஒடிசா சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.

ஆந்திராவில் மொத்த சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை 175. 88 இடங்களில் வெற்றி பெறும் கட்சி ஆட்சியை பிடிக்கும். இந்த தேர்தலில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி 144 இடங்களிலும், ஜனசேனா கட்சி 21 இடங்களிலும், பாஜக 10 இடங்களிலும் போட்டியிட்டன.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து தெலுங்கு தேசம்-பா.ஜ.க. கூட்டணி முன்னிலையில் இருந்தது. காலை 10 மணி நிலவரப்படி தெலுங்கு தேசம் கட்சி 106 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதன் மூலம் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை கடந்து தெலுங்கு தேசம் முன்னணியில் இருப்பதால் ஆட்சியை பிடிப்பது உறுதி. கூட்டணி கட்சியான பாஜக 4 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. அக்கட்சி 15 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. ஜனசேனா கட்சியும் 15 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. வாக்கு சதவீதத்தைப் பொருத்தவரை தெலுங்குதேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் இருவருடனும் நெருங்கி வருகிறது. காலை 10 மணி நிலவரப்படி தெலுங்கு தேசம் 45 சதவீத வாக்குகளையும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு 40 சதவீத வாக்குகள் கிடைத்தன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.