
இந்திய - நேபாள எல்லை பிரச்னையில் பொறுப்பேற்காத உத்தர பிரதேச முதல்வர் அது குறித்து பேச வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட வேண்டும், அச்சுறுத்தும் கருத்துக்களுக்கு அவரை இந்திய அரசு கண்டிக்க வேண்டும் என நேபாள பிரதமர் கே.பி.ஒலி வலியுறுத்தியுள்ளார்.
நேபாள அரசு சமீபத்தில் வெளியிட்ட புதிய வரைபடத்தில் இந்திய பகுதிகளான லிபுலேக், கலபானி மற்றும் லிம்பியாதுரா ஆகியவற்றை தங்கள் நாட்டில் இணைத்துள்ளது. மேலும் லிபுலேக் வரை போடப்பட்டுள்ள 80 கி.மீ சாலையை திறந்ததற்கு இந்தியாவிடம் கடந்த மாதம் காத்மாண்டு எதிர்ப்பு தெரிவித்தது. அப்போதிலிருந்து இரு நாடுகளுக்கிடையே எல்லை பிரச்னை நீடித்து வருகிறது. இந்த நிலையில் புதிய வரைபடத்திற்கு சட்டப்பூர்வ ஆதரவை பெறுவதற்காக அரசியலமைப்பு திருத்தத்தை செவ்வாயன்று நேபாள பாராளுமன்றத்தின் கீழ் சபையில் தாக்கல் செய்தனர்.
இதற்கு அனைத்து அரசியல் கட்சி உறுப்பினர்களும் ஏகமனதாக ஒப்புதல் அளித்தனர். இது தொடர்பாக நேற்று (ஜூன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் அந்நாட்டு பிரதமர் கே.பி.ஒலி பங்கேற்று பேசினார். அதில், லிபுலேக், கலபானி மற்றும் லிம்பியாதுரா ஆகியவை தங்கள் பகுதிகள் என்ற இந்தியாவின் வாதத்தை கேள்வி எழுப்பியவர், நேபாளத்திற்கு சொந்தமான அப்பகுதியில் 1960-களின் முற்பகுதியிலிருந்து இந்தியா தனது ஆயுதப்படைகளை நிறுத்தியது. பேச்சுவார்த்தை மூலம் நேபாளம் தனது பிராந்தியத்தை திரும்பப் பெறுவது குறித்து நம்பிக்கையுடன் உள்ளது.
உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் நேபாளம் குறித்து சில விஷயங்களை கூறினார். அவரது கருத்துக்கள் நியாயமானவை அல்ல. இந்திய அரசின் தலைமை, அவர் பொறுப்பேற்காத பிரச்சினைகள் குறித்து பேச வேண்டாம் என்று அவரிடம் சொல்ல வேண்டும். நேபாளத்தை அச்சுறுத்தும் அவரது கருத்துக்கள் கண்டிக்கப்படும் என்றும் அவரிடம் கூறப்பட வேண்டும். இவ்வாறு பேசினார். முன்னதாக இந்திய - நேபாள எல்லை பிரச்னை குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் ஆதித்யநாத், நேபாளம் தனது அரசியல் எல்லைகளை நிர்ணயிக்கும் போது திபெத்தின் தவறை மீண்டும் செய்யக்கூடாது. அதன் விளைவுகள் பற்றியும், திபெத்திற்கு என்ன நடந்தது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.

AthibAn Tv