கொரோனா தொற்றால் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான உணவு நெருக்கடியின் விளிம்பில் உலகம் நிற்பதாகவும், பேரழிவை தவிர்க்க அரசுகள் விரைவாக செயல்பட வேண்டுமென ஐ.நா பொதுச்செயலர் அன்டோனியோ குட்டரெஸ் எச்சரித்துள்ளார்.
ஐ.நா சபை பொதுச்செயலர் அன்டோனியோ குட்டரெஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கொரோனா தொற்று காரணமாக இந்தாண்டு சுமார் 50 மில்லியன் மக்கள் கடுமையான வறுமையில் விழும் அபாயம் உள்ளது. ஆனால் நீண்டகால விளைவுகள் இன்னும் மோசமாக இருக்கும். ஏனெனில் குழந்தை பருவத்தில் மோசமான ஊட்டச்சத்து வாழ்நாள் முழுவதும் துன்பத்தை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே, உலகெங்கிலும் உள்ள ஐந்து குழந்தைகளில், ஒரு குழந்தை ஐந்து வயதிற்குள் அவர்களின் வளர்ச்சியில் தடுமாறிக் கொண்டிருக்கிறது. மேலும் வறுமை விகிதங்கள் உயர்ந்தால் இன்னும் பல மில்லியன் மக்கள் இதே கதியை சந்திக்க நேரிடும்.
ஏழை மக்களுக்கு உடனடியாக சமூக பாதுகாப்பு அளிப்பது அவசியம். கொரோனா தொற்று பாதிப்பால் நிலவும் மந்தநிலை அவர்களுக்கு அடிப்படை ஊட்டச்சத்து கிடைக்காமல் போக வழிவகுக்கும். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், வரவிருக்கும் உலகளாவிய உணவு அவசரநிலை, மில்லியன் கணக்கில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்துமென்பது தெளிவாக தெரிகிறது. கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளின் மோசமான தாக்கங்களைத் தவிர்க்க நாம் இப்போதே செயல்பட வேண்டும்.
பிரதான பயிர்களின் அறுவடைகள் நீடிக்கும் போதும், நிபுணர்கள் அஞ்சும் ஏற்றுமதிக்கான தடைகள் மற்றும் பாதுகாப்புவாதம் போன்றவை பெரும்பாலும் தவிர்க்கப்பட்டிருந்தாலும், கொரோனா தொற்று மற்றும் அடுத்தடுத்த மந்தநிலையின் தாக்கங்களில் மோசமானவை என்பது இன்னும் உணரப்படவில்லை. ஏராளமான உணவு உற்பத்தி செய்யப்படும் நாடுகளில் கூட, உணவு வினியோகத்தில் இடையூறு ஏற்படுவதற்கான அபாயம் இருக்கிறது. இதற்கு மூன்று அம்ச திட்டத்தை குட்டரெஸ் முன்மொழிந்துள்ளார்.
உடனடி பேரழிவை தடுக்க கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கவனம் செலுத்துதல். அரசாங்கங்கள் உணவு வினியோக சங்கிலிகளுக்கு முன்னுரிமை அளித்தல், சிறு குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் ஊரடங்கால் பள்ளிகளில் உணவு கிடைக்காத குழந்தைகள் உள்பட பிற ஆபத்தான பிரிவினருக்கு சமூக பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, போதுமான ஊட்டச்சத்தை பெற வேண்டும். உலகளாவிய தொற்றுநோயில் இருந்து மீட்சியடையும் வகையில், ஆரோக்கியமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு முன்னுரிமை அளிக்கும் உணவு அமைப்பில், எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


AthibAn Tv