Type Here to Get Search Results !

ஆப்ரிக்க அமெரிக்கர், ஜார்ஜ் பிளாய்டின், 46, இறுதிச் சடங்குகள் நேற்று முன்தினம் நடந்தன

latest tamil news

போலீஸ் அத்துமீறலில் உயிரிழந்த, ஆப்ரிக்க அமெரிக்கர், ஜார்ஜ் பிளாய்டின், 46, இறுதிச் சடங்குகள் நேற்று முன்தினம் நடந்தன. ஆயிரக்கணக்கான மக்கள், அவருடைய இறுதிச் சடங்கில் பங்கேற்று, கண்ணீருடன் அவருக்கு பிரியா விடை கொடுத்தனர்.அமெரிக்காவின் மினியாபொலிசில், போலீஸ் அதிகாரி ஒருவர், தனது முழங்கலால் கழுத்தில் நெருக்கியதில், ஜார்ஜ் பிளாய்டு என்ற ஆப்ரிக்க அமெரிக்கர், மூச்சுத் திணறி உயிரிழந்தார்.

மே, 25ல் நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து, அமெரிக்கா முழுதும், இனவெறி தாக்குதலுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன.நாட்டின் பெரும்பாலான நகரங்களில், 10 நாட்களுக்கு மேலாக வன்முறை சம்பவங்களும் நடந்தன. போலீஸ் வாகனங்களுக்கு தீ வைப்பு, சிலைகள் சேதப்படுத்துதல், கடைகளில் சூறையாடியது என, வன்முறை தலைவிரித்தாடியது.கறுப்பின மக்களுக்கு எதிரான இன பேதத்தைக் கண்டித்து, உலகின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்தன. மினியாபொலிஸ் போலீஸ் பிரிவை கலைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இவ்வாறு கறுப்பின மக்களுக்கு எதிரான பாகுபாடு குறித்த பிரச்னை உலகெங்கும் பரவலாக பேசப்படுவதற்கு, இந்த சம்பவம் ஒரு முக்கிய காரணமானது.

இதற்கிடையே, போலீஸ் அத்துமீறலில் உயிரிழந்த, ஜார்ஜ் பிளாய்டு, கறுப்பின பாகுபாட்டின் அடையாளமாக கருதப்பட்டார். கடந்த, ஆறு நாட்களில், அவர் பிறந்த வடக்கு கரோலினாவின் ரேபோர்டு, அவர் வளர்ந்த ஹூஸ்டன், அவர் உயிரிழந்த மினியாபொலிஸ் என, மூன்று இடங்களில் பிரார்த்தனை கூட்டங்கள் நடந்தன.இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம், ஹூஸ்டனில் அவருடைய உடலடக்கம் நடந்தது. தாயின் சமாதி அருகே, அவருடைய உடலடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதிச் சடங்கில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்துஆயிரக்கணக்கானோர்பங்கேற்றனர். கண்ணீருடன், இன பேதத்துக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதாக, அவர்கள் உறுதி ஏற்றனர்.

பிளாய்டின் குடும்பத்தார், வெள்ளை நிற ஆடைகளை அணிந்து, இறுதிச் சடங்கில் பங்கேற்றனர். ஹூஸ்டன் மேயர்சில்வஸ்டர் டர்னர் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் இறுதிச் சடங்கு மற்றும் பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்றனர்.'ஹூஸ்டனில் இனி, போலீசார் கைகளை முறுக்கி நெருக்குவதற்கு தடை விதிக்கும் உத்தரவில் கையெழுத்திட உள்ளேன்' என, டர்னர் அறிவித்தார். அந்த அறிவிப்பை, அங்கிருந்த மக்கள், கைகளைத் தட்டி வரவேற்றனர்.இந்தாண்டு இறுதியில் நடக்க உள்ள அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட உள்ள, முன்னாள் துணை அதிபர்,ஜோ பிடன், ஹூஸ்டனுக்கு வந்து, பிளாய்டின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பாதுகாப்பு காரணங்களால், இறுதிச் சடங்கில் அவர் பங்கேற்கவில்லை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.