
'நடப்பு, 2020 அமெரிக்க அதிபர் தேர்தலில், தான் மீண்டும் வெற்றி பெற உதவக்கோரி, சீன அதிபர் ஜின்பிங்கிடம், அதிபர் டிரம்ப் கெஞ்சி கேட்டுக் கொண்டார்' என, முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் எழுதியுள்ள புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜான் போல்டன், 'தி ரூம், வேர் இட் ஹேப்பெண்டு: ஏ ஒயிட் ஹவுஸ் மெமாய்ர்' என்ற தலைப்பின்கீழ், ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். அதில், அதிபர் டிரம்ப் மீது, பல குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார்.
அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
சீனாவில், உய்கர் முஸ்லிம்களை தடுப்புக் காவலில் அடைத்து வைக்க, சீன அரசு முகாம்களை கட்டியது. அந்தப் பணிகள் குறித்து, சீன அதிபர் ஜின்பிங், அமெரிக்க அதிபர் டிரம்பிடம் தெரிவித்தார். அது, சரியான செயல் என நினைத்த டிரம்ப், முகாம்களை கட்ட, சீனாவுக்கு ஆதரவும் தெரிவித்தார்.கடந்த ஆண்டு ஜூன், 29ம் தேதி, ஜப்பானின் ஒசாகாவில் நடந்த, ஜி20 மாநாட்டிற்கு இடையே, டிரம்ப், ஜின்பிங்கை சந்தித்துப் பேசினார்.
அந்த பேச்சின்போது, 2020 அதிபர் தேர்தலில், தான் மீண்டும் வெற்றி பெற உதவ வேண்டும் என, சீன அதிபரிடம், டிரம்ப் கெஞ்சி கேட்டுக் கொண்டார். அதிபர் டிரம்ப் கூறிய வார்த்தைகளை, என்னால் குறிப்பிட இயலவில்லை. ஏனெனில், அந்த வார்த்தைகளை வெளியிட, தடை விதிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட அரசியல் லாபத்திற்காக, வெளியுறவுக் கொள்கைகளை தேர்வு செய்து கொண்டவர் அதிபர் டிரம்ப்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அதிபர் டிரம்ப், “ஜான் போல்டன், பொய் பேசுபவர். வெள்ளை மாளிகையில் உள்ள அனைவரும், அவரை வெறுத்தனர். அரசின் ரகசிய தகவல்களை, அனுமதி இன்றி, வெளியிட்டு, போல்டன் குற்றம் இழைத்து விட்டார்,” என்றார்.இந்த புத்தகத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி, அதிபர் டிரம்ப் நிர்வாகம், நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.
முறையான திட்டம் இல்லை
இந்தியா - சீனா இடையே நிலவும் பிரச்னைக்கு, மத்தியஸ்தராக இருந்து தீர்வு காண தயாராக இருப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கடந்த மாதம் கூறியிருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கெய்லீ மெக்னானி, “இது குறித்த திட்டங்கள் எதுவும் இல்லை,” என்றார். இதற்கிடையே, இரு நாட்டு பிரச்னைக்கு தீர்வு காண, இந்தியாவுக்கு, ரஷ்ய அரசு ஆதரவு தெரிவித்துள்ளது.


AthibAn Tv