சிக்கிம் மாநிலத்தை தனிநாடாக டில்லி அரசு விளம்பரம் வெளியிட்டது சர்ச்சையானதை அடுத்து, விளம்பரத்தை திரும்ப பெற்றதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
சிவில் பாதுகாப்பு படையினருக்கான தன்னார்வலர்களை சேர்ப்பதற்காக அறிவிப்பு குறித்த விளம்பரம் டில்லி அரசு சார்பில் வெளியிடப்பட்டிருந்தது. அதில் நேபாளம், பூடான் போன்ற தனி நாடுகளைப் போல இந்தியாவை சேர்ந்த சிக்கிம் மாநிலத்தையும் ‛தனி நாடு' என குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ‛சிக்கிம் மாநிலம் 1975ம் ஆண்டு மே 16ம் தேதி இந்தியாவின் 22வது மாநிலமாக மாறியது. அன்றில் இருந்து நமது பெரிய நாட்டின் குடிமக்கள் என்பதில் பெருமை கொள்ளும் மக்களுக்கு இந்த விளம்பரம் வேதனையளிக்கிறது. இந்த விளம்பரத்தை திரும்ப பெற வேண்டும். சிக்கிம் மக்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் வேறு ஒரு விளம்பரத்தை வெளியிட வேண்டும்,' என சிக்கிம் மாநில தலைமை செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛சிக்கிம் இந்தியாவின் ஒருபகுதி. இந்த பிழை கண்டிக்கத்தக்கது. கடந்த வாரத்தில் தான் மாநில தினம் கொண்டாடப்பட்டது. இதனை டில்லி அரசு சரி செய்ய வேண்டும் பதிவிட்டார். முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், ‛சிக்கிம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான்.
இது போன்ற பிழைகளை பொறுத்து கொள்ள முடியாது. விளம்பரம் திரும்ப பெறப்பட்டுள்ளது. பிழைக்கு காரணமான அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது,' என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த சர்ச்சை தொடர்பாக சிவில் பாதுகாப்பு இயக்குனரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக துணை நிலை கவர்னர் அனில்பைஜால் பதிவிட்டுள்ளார்.


AthibAn Tv