Type Here to Get Search Results !

மதங்களை கடந்த மனிதநேயம்: கேரளா படுக்கையில் இறந்த இந்து முதியவருக்கு ‘மகளாக’ நின்று இறுதிச்சடங்கு செய்த முஸ்லிம் பெண்!



மதங்களை கடந்த மனிதநேயம்: கேரளா படுக்கையில் இறந்த இந்து முதியவருக்கு ‘மகளாக’ நின்று இறுதிச்சடங்கு செய்த முஸ்லிம் பெண்!

காசர்கோடு: மதங்களுக்கும் அரசியலுக்கும் அப்பாற்பட்டது மனிதநேயம் என்பதை நிரூபிக்கும் வகையில், கேரளாவில் உயிரிழந்த இந்து முதியவர் ஒருவருக்கு முஸ்லிம் பெண் ஒருவர் மகளாக மாறி, தீ மூட்டி இறுதிச் சடங்குகளைச் செய்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.

கைவிடப்பட்ட முதியவர்:

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தின் மீஞ்சா பஞ்சாயத்துப் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன் (64). இவருக்கு இரண்டு மனைவிகளும், குழந்தைகள் இருந்தும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்பத்தினர் இவரை முற்றிலுமாகக் கைவிட்டனர். இதனால் ஆதரவற்றுத் தெருவில் தவித்த நாராயணனை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சியின் மஞ்சேஸ்வரம் தொகுதி நிர்வாகியும், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினருமான இர்பானா இக்பால் (34) என்பவர் மீட்டார். தான் நடத்தி வரும் 'ஷேக் சையத் பவுண்டேஷன்' ஆதரவற்றோர் இல்லத்தில் நாராயணனைச் சேர்த்து தஞ்சம் அளித்துப் பராமரித்து வந்தார்.

மகளாக நின்ற இர்பானா:

இந்நிலையில், உடல்நலக் குறைவால் நாராயணன் காலமானார். அவர் இறந்து இரண்டு நாள்களாகியும் அவருடைய உறவினர்கள் யாரும் உடலைப் பெற்றுக்கொள்ள முன்வரவில்லை. இதனால், கடந்த வெள்ளிக்கிழமையன்று காசர்கோடு சிருகாலி பகுதியில் உள்ள பொது மயானத்தில், நாராயணனின் உடலுக்கு இர்பானா இக்பாலே நேரில் நின்று தீ மூட்டி, இந்து முறைப்படி இறுதிச் சடங்குகளைச் செய்து முடித்தார்.

சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சிப் பதிவு:

இந்த நெகிழ்ச்சிச் சம்பவம் குறித்து இர்பானா இக்பால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"கடந்த மாதம் நாராயணன் அண்ணனை நான் தெருவிலிருந்து மீட்டபோது, அவரை நன்றாகப் பார்த்துக் கொள்வேன் என்று உள்ளூர் மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தேன். அவர் உயிரிழந்த பிறகும் என்னால் அவரைக் கைவிட முடியவில்லை. ஒரு மகளாக நின்று நாராயணன் அண்ணனின் இறுதிச் சடங்குகளை நான் நிறைவேற்றியுள்ளேன். மதங்களுக்கும் அரசியலுக்கும் அப்பாற்பட்டது மனிதநேயம்".

இனம், மொழி, மதம் கடந்து ஒரு முதியவரின் இறுதிப் பயணத்திற்குத் தோள் கொடுத்த இர்பானா இக்பாலின் இந்த நற்செயலுக்குச் சமூக வலைதளங்களில் பலரும் தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.