அமைச்சர் சரத்குமாருக்கு எதிரான திமுக ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுப்பு: தடையை மீறி திரண்டவர்கள் அதிரடி கைது!
சென்னை: அமைச்சர் சரத்குமாரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி திமுக மாணவர் அணி இன்று (ஜூன் 29) நடத்தவிருந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்குக் காவல் துறை அனுமதி மறுத்ததோடு, தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற திமுகவினரை அதிரடியாகக் கைது செய்துள்ள சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சையை ஏற்படுத்திய 'தக் லைஃப்' வீடியோ:
கடந்த சில தினங்களுக்கு முன்பு, தமிழக மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் பொது இடத்தில் போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
உண்மையில், இந்த வீடியோ இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டியைக் காணச் சென்றபோது எடுக்கப்பட்டதாகும். அதில், ஸ்மார்ட்போன் மீது பவுடர் போன்ற பொருளை வைத்து ஏடிஎம் கார்டு மூலம் பொடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த பழைய வீடியோ கடந்த ஜூன் 26-ம் தேதி சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தன்று மீண்டும் வைரலானதால், அமைச்சர் போதைப்பொருளைப் பயன்படுத்தியதாகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
இதற்கு விளக்கம் அளித்துத் தனது மனைவியுடன் அமைச்சர் சரத்குமார் வெளியிட்ட வீடியோவில், "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எனது ஒன்றரை வயது குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தது; முழு மாத்திரையை விழுங்க முடியாததால் அதை ஸ்மார்ட்போன் மீது வைத்துப் பவுடராக்கிக் கொடுத்தேன்" என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், இந்த விளக்கமும் பொதுவெளியில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.
திமுக மாணவர் அணியின் அறிக்கை மற்றும் போராட்டம்:
இந்த விவகாரம் தொடர்பாக திமுக மாணவர் அணி வெளியிட்ட அறிக்கையில், "ஆளும் தவெக அரசின் அமைச்சர் சரத்குமார், பொது வெளியில் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவது போல வீடியோ எடுத்து, அதை 'தக் லைஃப் மொமென்ட்' என்று ரீல்ஸ் செய்து வைரலாக்கியுள்ளார். இந்தச் செயல் இளைஞர்களைத் தவறான பாதைக்கு ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளது. இத்தகைய போக்கைக் கொண்ட ஒருவர் அமைச்சரவையில் தொடர்வது தமிழக இளைஞர்களுக்கு நன்மை தராது. எனவே, அவரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி இன்று தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகம் முழுவதும் திமுகவினர் கைது:
முன்னரே திட்டமிட்டபடி இன்று ஆர்ப்பாட்டம் நடத்த திமுகவினர் முயன்ற நிலையில், தமிழகம் முழுவதும் இந்தத் தொடர் போராட்டத்திற்குச் சட்டம் ஒழுங்கைக் கருதி காவல் துறை அனுமதி மறுத்தது.
சென்னையில், எழும்பூர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக மேடை அமைத்த திமுகவினரைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். மேலும், தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற திமுக மாணவர் அணியினர் மற்றும் கட்சி நிர்வாகிகளைப் போலீஸார் அதிரடியாகக் கைது செய்து வாகனங்களில் ஏற்றியதால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.
"அதிகார வெறி; சர்வாதிகார ஆட்டம்" - திமுக ஐடி விங் கடும் கண்டனம்:
ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு, திமுகவினர் கைது செய்யப்பட்டதற்கு திமுக ஐடி விங் (IT Wing) தனது சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
அதில், "பொது இடத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக அப்பட்டமாக வீடியோ ஆதாரத்துடன் சிக்கிய அமைச்சர் சரத்குமாரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, அறவழியில் அமைதியான முறையில் போராடத் தயாரான திமுக மாணவர் அணியினருக்கு அனுமதி மறுத்துக் கைது செய்திருக்கும் தவெக அரசின் இந்த அராஜகம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உங்களின் ‘தக் லைஃப்’ அமைச்சர்களின் வண்டவாளங்களைத் தோலுரித்தால் ஏன் இந்த அளவுக்குக் கை நடுங்கிப் போய் போலீஸுக்குப் பின்னால் ஒளிகிறீர்கள்? ஜனநாயக ரீதியான ஒரு அமைதிப் போராட்டத்தைக் கூட எதிர்கொள்ளத் துணிவில்லாத ஒரு கோழை அரசாங்கம் தமிழகத்தை ஆள்வது வெட்கக்கேடு. அதிகார வெறி கொண்டு நீங்கள் போடும் இந்த சர்வாதிகார ஆட்டத்திற்குத் தமிழக இளைஞர்களும், மக்களும் வீதியில் இறங்கி மிக விரைவில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்" என்று தவெக அரசை மிகக் காரசாரமாக விமரிசித்துக் குறிப்பிட்டுள்ளனர்.



AthibAn Tv