Type Here to Get Search Results !

காதலனுடன் சேர்ந்து வருங்கால கணவரை தள்ளிக் கொன்றது எப்படி? - லோஹாகாட் கோட்டையில் சியா கோயல் நடித்துக் காட்டிய திடுக்கிடும் காட்சிகள்!



காதலனுடன் சேர்ந்து வருங்கால கணவரை தள்ளிக் கொன்றது எப்படி? - லோஹாகாட் கோட்டையில் சியா கோயல் நடித்துக் காட்டிய திடுக்கிடும் காட்சிகள்!

புனே: மகாராஷ்டிர மாநிலம் புனேயில், காதலனுடன் சேர்ந்து தனது வருங்கால கணவரை மலை உச்சியிலிருந்து தள்ளிக் கொலை செய்த வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள இளம் பெண் சியா கோயல் கொலை நடந்த இடத்திலேயே அதனை அச்சு அசலாக போலீஸாரிடம் நடித்துக் காட்டியுள்ளார்.

பின்னணி என்ன?

புனே நகரைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கேத்தன் அகர்வால் (26). இவருக்கும் சியா கோயல் (20) என்ற இளம் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சியா கோயல் தனது காதலன் சேத்தன் சவுத்ரியுடன் இணைந்து, கடந்த ஜூன் 18-ம் தேதி லோஹாகாட் கோட்டை மலை உச்சியிலிருந்து கேத்தனை கீழே தள்ளிப் படுகொலை செய்தார். இச்சம்பவம் தொடர்பாக இருவரையும் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கொலையை நடித்துக் காட்டிய குற்றவாளிகள்:

இந்தக் கொலை வழக்கு தொடர்பாக புனே ஊரகக் காவல் கண்காணிப்பாளர் சந்தீப் சிங் கில் கூறியிருப்பதாவது:

"சியா கோயல் மற்றும் சேத்தன் சவுத்ரி ஆகிய இருவரையும் லோஹாகாட் கோட்டையில் கொலை நடந்த இடத்திற்கு நேரடியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தினோம். அவர்கள் எந்தப் பாதை வழியாகக் கோட்டைக்கு வந்தனர், சம்பவத்தன்று எந்தெந்த இடங்களில் நின்றுகொண்டிருந்தனர், கேத்தனை எவ்வாறு மலை உச்சியிலிருந்து கீழே தள்ளினர் என்பது போன்ற அனைத்து நிகழ்வுகளையும் அவர்கள் போலீஸார் முன்னிலையில் அச்சு அசலாக நடித்துக் காட்டினர்.

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த மறு உருவாக்கம் (Crime Scene Reconstitution) நடவடிக்கையின் போது லோஹாகாட் கோட்டைக்கு பொதுமக்களின் வருகை தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டிருந்தது. இந்த ஒட்டுமொத்த விசாரணையும் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது".

விசாரணையில் வெளியான ரகசிய சிக்னல்:

இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், "கோட்டைக்குக் கேத்தனுடன் சியா கோயல் சென்றபோது, அவர்களைப் பின் தொடர்ந்த காதலன் சேத்தனுக்குச் சியா ஏதோ ஒரு ரகசிய சிக்னல் கொடுத்துள்ளார். அந்த சிக்னல் கிடைத்த பிறகே, இருவரும் இணைந்து கேத்தனை அணுவளவும் சந்தேகமின்றி மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிப் படுகொலை செய்துள்ளனர். மேலும், காதலன் சேத்தன் சவுத்ரி யாருக்கும் சந்தேகம் வராதபடி, கோட்டைக்கு நுழைவுக் கட்டணம் ஏதுமின்றி ரகசியமாக உள்ளே நுழைந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளன.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட தொழிலதிபரை, வருங்கால மனைவியே காதலனுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய இந்தச் சம்பவம் புனே பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.