80 வயதில் மாஸ் காட்டிய இந்திய தாத்தா: ஆஸ்திரேலியாவில் பேரனுடன் 18,000 அடி உயரத்தில் இருந்து 'ஸ்கை டைவிங்' செய்து சாதனை!
சிட்னி: "வயது என்பது வெறும் எண்தான்" என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் இந்தியாவைச் சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவர். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஸ்கை டைவிங் (Skydiving) சாகசத்தில், தனது பேரனுடன் சேர்ந்து 18,000 அடி உயரத்தில் இருந்து அவர் குதித்த திகைப்பூட்டும் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாய் பரவி வைரலாகி வருகிறது.
பேரனின் ஆசை; தாத்தாவின் தைரியம்!
இந்தியாவின் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் அங்கித். ஸ்கை டைவிங் சாகசங்களில் அதிக ஆர்வம் கொண்ட இவர் தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். அங்கித் ஏற்கனவே தனது தாத்தாவுடன் இணைந்து 15,000 அடி உயரத்தில் இருந்து குதித்து சாதனை படைத்திருந்தார். அந்த தைரியத்தில், இந்த முறை அதைவிட அதிக உயரமான 18,000 அடி உயரத்தில் இருந்து குதிக்க இருவரும் முடிவு செய்தனர்.
"யார் பயந்தது?" - விமானத்தில் மாஸ் காட்டிய முதியவர்:
சாகசத்திற்காக விமானத்தில் ஏறும் முன்பாக, பேரன் அங்கித் தனது 80 வயது தாத்தாவிடம் "பயப்பட வேண்டாம்" என்று கூறியுள்ளார். அதற்கு சற்றும் யோசிக்காமல் கம்பீரமாகப் பதிலளித்த தாத்தா, "யார் பயந்தது?" என்று சவால் விட்டு, விமானத்தில் இருந்து பேரன் அங்கித்துடன் துணிச்சலாகக் கீழே குதித்தார். பின்னர் பாராசூட் (Parachute) உதவியுடன் வானில் பறந்து வந்து வெற்றிகரமாகத் தரையிறங்கினார்.
தேசியக் கொடியுடன் 'ஜெய் ஹிந்த்' முழக்கம்!
ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய தேசியக் கொடியுடன் கம்பீரமாகத் தரையிறங்கிய அந்த 80 வயது தாத்தா, "ஜெய் ஹிந்த்! ஜெய் பாரத்! ஜெய் ஹரியானா!" என தேசபக்தியுடன் உற்சாகமாகக் குரல் எழுப்பினார். பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும் இந்த அரிய சாகச வீடியோவை அங்கித் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இணையவாசிகள் பலரும் இந்த வயதிலும் குறையாத தாத்தாவின் தைரியத்தைப் பாராட்டி, வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.



AthibAn Tv