"காங்கிரசிடம் உயர்கல்வித் துறையை ஒப்படைத்தால் நமது பிள்ளைகள் எப்படி கரை சேர்வார்கள்?" - தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் சாடல்!
சென்னை: தமிழக அரசின் கீழ் இயங்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 43 சதவீத இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் கடும் அதிர்ச்சியளிப்பதாகத் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தற்போதைய விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில் உயர்கல்வித் துறையை காங்கிரசிடம் ஒப்படைத்திருப்பதைக் கடுமையாக விமர்சித்துள்ள அவர், மாணவர்களின் எதிர்காலம் பாழாகிவிடும் என்றும் எச்சரித்துள்ளார்.
இது குறித்துத் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
43% இடங்கள் காலி: உயர்கல்வித் துறையின் உண்மை லட்சணம்
"பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்து, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைகள் பரபரப்பாக நடந்து வரும் வேளையில், தமிழக அரசின் கீழ் இயங்கும் 181 அரசு கலைக் கல்லூரிகளில் 43 சதவீத இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் கடும் அதிர்ச்சியளிக்கிறது.
இத்தனைக்கும் கடந்த 18-ஆம் தேதியுடன் அரசுக் கலைக் கல்லூரிகளுக்கான கலந்தாய்வை நிறைவு செய்ய வேண்டும் என அரசு தெரிவித்திருந்த நிலையில், இடங்கள் நிரம்பாததால் மேலும் சில நாட்களுக்குக் கலந்தாய்வை நீட்டித்தும் கூட, பாதி இடங்கள் தான் நிரம்பியுள்ளன என்பது உயர்கல்வித் துறையின் உண்மை லட்சணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஆயிரக்கணக்கில் பணம் செலவானாலும் பரவாயில்லை என மக்கள் அரசு கல்லூரிகளைப் புறக்கணித்து விட்டு, தனியார் கல்லூரிகளை நாடுவது ஆளும் அரசுக்கு வெட்கக்கேடானது.
"ரோட்டில் குத்தாட்டம் போட்டால் துறை எப்படி உருப்படும்?"
அடிப்படை வசதிகளின்றி முடங்கிக் கிடக்கும் அரசு கல்லூரிகளை உடனடியாக ஆய்வு செய்து மேம்படுத்த வேண்டிய உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன், நட்ட நடு ரோட்டில் சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தால் துறை எப்படி உருப்படும்? அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்படிச் சீராக நடக்கும்?
ஏற்கனவே திமுக ஆட்சியில் அதல பாதாளத்தின் விளிம்பில் நின்று கொண்டிருந்த உயர்கல்வித் துறையை, கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளாகத் தமிழக அரசவையில் இடம் கிடைக்காமல் “கோமா”வில் கிடந்த காங்கிரஸிடம் தூக்கிக் கொடுத்துள்ளார் முதல்-அமைச்சர் விஜய்.
"பிள்ளைகளின் எதிர்காலம் மொத்தமாகப் பாழாகிவிடும்!"
முதல்-அமைச்சர் விஜய் அவர்கள், காங்கிரஸ் அமைச்சரின் இத்தகைய செயல்பாடுகளைச் சற்று கவனத்துடன் கண்காணிக்க வேண்டும்! இல்லையெனில் நமது பிள்ளைகளின் எதிர்காலம் மொத்தமாகப் பாழாகிவிடும். காங்கிரசிடம் உயர்கல்வித் துறையை ஒப்படைத்தால், நமது பிள்ளைகள் எப்படித்தான் கரை சேர்வார்கள்?" என்று நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பதிவின் மூலம் தற்போதைய ஆளும் அரசைக் கடுமையாகச் சாடியுள்ளார்.



AthibAn Tv