நிஹாரிகா: மனித மனக்கிடங்கின் ‘இருளிச்சைகளை’ அக்குவேறானிவேறாக அலசும் ஒரு தியானம்!
“நட்சத்திரங்களே, உங்கள் ஒளியை மறைத்துக் கொள்ளுங்கள்... என் இருண்ட இச்சைகள் மீது வெளிச்சம் பட வேண்டாம்.”
— ஷேக்ஸ்பியரின் ‘மேக்பத்’
டன்கனைக் கொன்று அரியணை ஏறத் துடிக்கும் மேக்பத்தின் இந்தச் சுயகூற்று, அவனது அக உலகை அப்படியே படம் பிடித்துக் காட்டிவிடுகிறது. மானுட மனம் என்பது அன்பு, பாசம், பரிவு ஆகியவற்றின் இருப்பிடம் மட்டுமல்ல; அது, எவராலும் எளிதில் அணுக முடியாத ‘இருளிச்சைகளை’ (Dark Desires) பதுக்கி வைத்திருக்கும் ஒரு மாபெரும் ரகசியக் கிடங்கும்கூட.
உளவியலாளர் கார்ல் ஜங் (Carl Jung) மனிதனுக்குள் இருக்கும் இத்தகைய சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத, ஒடுக்கப்பட்ட ஆசைகளை ‘நிழல் சுயம்’ (Shadow Self) என்று குறிப்பிடுகிறார். இந்த இருள் இச்சைகளுக்குச் செவி கொடுத்துச் செயல்படுபவன் சமூகத்திற்கு ஆபத்தாகிறான்; அவற்றை அடக்கி ஆள்பவன் அறம் காப்பவனாகிறான்.
இத்தகைய மனித மனதின் விசித்திரமான இருளிச்சை மேலாண்மையைப் பற்றி மிக ஆழமாகப் பேசும் திரைப்படம்தான், 2023-ல் வெளியாகிப் பல்வேறு சர்வதேச விருதுகளைக் குவித்த ‘நிஹாரிகா - இன் தி மிஸ்ட்’ (Niharika - in the mist). பிரபல எழுத்தாளர் சஞ்சீப் சட்டோபாத்யாயின் ‘Bhoy’ (அச்சம்) என்ற கதையைத் தழுவி, சைக்காலஜிக்கல் டிராமா ஜானரில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் தற்போது அமேசான் பிரைம் ஓடிடியில் கிடைக்கிறது.
கொல்கத்தாவின் நாராசமும்... சிமுல்தலாவின் பனிமூட்டமும்
2 மணி நேரம் 4 நிமிடங்கள் ஓடும் இப்படம், பார்ப்பவர்களைத் தங்களுக்குள் சுயபரிசோதனை செய்துகொள்ளத் தூண்டும் ஒரு தியான நிலைக்குள் மூழ்கடிக்கிறது. படம் நெடுகிலும் வரும் சரோட் இசை, நம் சிந்தனைகளை மிக இலகுவாக ஒருமுகப்படுத்துகிறது.
கதையின் நாயகி தீபா (அணுராதா முகர்ஜி). அவளது பெயருக்கு ‘ஒளி’ என்று பொருள். ஆனால், கொல்கத்தாவில் அவளது பிறப்பிடமோ விசித்திரமானது. காலையில் தாயின் நடனம், பெரியம்மாவின் பஜனை, சித்தியின் எம்பிராய்டரி என ரம்மியமாகத் தொடங்கும் பொழுது, மாலை மங்கும்போது ஆண்களின் ரத்தத்தில் கலக்கும் சாராயத்தால் நாராசமாக மாறும். வசைபாடல்களும், சொத்துச் சண்டைகளும் அவளது பால்ய காலத்தைப் பெரும் காயங்களாக்கின.
தாயின் மறைவுக்குப் பின், அவளது சின்ன மாமா ஆகாஷ் (சிலஜித் மஜும்தார்) அவளை பீகாரில் உள்ள சிமுல்தலா என்ற நகரத்திற்கு அழைத்துச் செல்கிறார். ‘பீகாரின் சிம்லா’ என்றழைக்கப்படும் அந்த ஊரின் குளிர்ச்சியும், மாமாவின் வீடான ‘நிஹாரிகா’ (காலைப் பனித்துளி) என்ற அந்த இரண்டு அடுக்கு மாளிகையும் தீபாவிற்கு ஒரு தற்காலிகக் களிம்பாக அமைகின்றன.
வெள்ளை நாற்காலிகளும்... வெளிப்படாத ரகசியங்களும்
மாமா வீட்டில் அத்தை கேயா (மழைக்காலப் பூ) தீபாவிற்குத் தாயாகவும் தோழியாகவும் மாறுகிறாள். ஆரவாரமில்லாத அந்த இல்லறத்தின் மென்சோகத்திற்கு நடுவே, தீபாவின் காயங்களை ஆற்ற மாமா ஆகாஷ் அவளை இயற்கையின் மடிகளுக்கு அழைத்துச் செல்கிறான். தந்தை தராத பாதுகாப்பையும் அரவணைப்பையும் மாமனிடம் காணும் தீபா, நள்ளிரவில் தன் மனதின் விபரீதப் பக்கங்களை, தன் பாலியல் சார்ந்த குற்றவுணர்ச்சிகளை அவனிடம் உடைத்துப் பேசுகிறாள்.
நள்ளிரவு மொட்டை மாடி இருட்டில், இரு அறைகளுக்கு நடுவே பளிச்சிடும் அந்த வெள்ளை நாற்காலிகளும் டீப்பாயும் மனித மனதின் சிம்மாசனங்கள். மனிதனின் இருளிச்சைகளுக்கு இடையே, அவன் மனிதனாகவே இருக்கும் பண்பைப் பளிச்செனக் காட்டும் குறியீடு அது.
ஒரு மாமனாகவும், மருத்துவராகவும் காமம், பெண்ணின் உடல் தேவை மற்றும் தன்பாலின ஈர்ப்பு குறித்து ஆகாஷ் கொடுக்கும் விளக்கங்கள் ‘ஜென்’ தத்துவத்தின் உச்சம். “முத்தம் ருசியற்றது, ஆனால் அலாதி சுவையானது. அந்தச் சுவை நாவால் அல்ல, ஆன்மாவால் சுரப்பிகள் வழியாகக் கடத்தப்படுவது” என்ற அவனது வரிகள் கவித்துவமானவை.
எல்லையைத் தொடும் நெருப்பும்... மனிதப் பண்பின் வெற்றியும்
வரைமுறை தாண்டிய உறவுகள் மீது காமத்தால் உருவாகும் நெருக்கம் பொல்லாத தீ. ஒரு காட்சியில் தீபாவின் அறையை ஜன்னல் வழியே ஆகாஷ் எட்டிப் பார்க்கும்போது, அந்தத் தீ அவனது கண்களில் தெரிகிறது. ஆனால், அவனுள் இருக்கும் இருளிச்சையை மனிதப் பண்பு வெல்கிறது. தன் அறைக்குத் திரும்பும் ஆகாஷ், மனைவியிடம் “நான் மோசமானவன், அருவருப்பானவன், பயங்கரமானவன்” என்று பாவமன்னிப்புக் கேட்டு அழும் இடம் மனித மனதின் அப்பட்டமான சுயரூபம்.
கேயாவின் மரணத்திற்குப் பிறகு, ஆகாஷ் தீபாவிற்கு எழுதி வைக்கும் கடிதம்தான் ஒட்டுமொத்தக் கதையின் சாரம்:
"நான் ஒரு பாலியல் வக்கிரம் படைத்தவன், ஒரு பிசாசு... நாம் நெருங்கக் கூடாது. எனக்கு அவமானம் நேர்ந்தால் உயிரை மாய்த்துக் கொள்வேன். உன்னைவிட்டு நிரந்தரமாக ஓடுகிறேன்..."
மை இருட்டில் பாயும் காரின் ஹெட்லைட் ஒளிக் கீற்றைப் போலத்தான் மனித மனமும். அந்தச் சிறிய ஒளிக் கீற்றளவிலான சரி, தவறு என்று தீர்மானிக்கும் திறன்தான் மனிதனை மிருகமாக மாறிவிடாமல் மனிதனாகவே நிறுத்தி வைக்கிறது.
கரடுமுரடான இயற்கையும்... அகண்ட ஆகாசமும்
ஆறு மாதங்களுக்குப் பிறகு, பருவமழைக் காலத்தில் காற்று மற்றும் மழையின் பேரிரைச்சலோடு இயற்கை கரடுமுரடாகக் காட்டப்படுகிறது. மனித மனமும் இயற்கையின் சிருஷ்டிதான்; அதுவும் சில நேரங்களில் கரடுமுரடானது, அருவருப்பானது. பேப்பரில் வரைந்து சிவப்பு வண்ணம் பூசும் ‘ஹார்ட்டின்’ போல இருதயம் எப்போதும் அழகாக இருப்பதில்லை.
தீபாவிற்கு மறுவாழ்வு அமைத்துக் கொடுத்துவிட்டு விடைபெறும் ஆகாஷ், பல வருடங்களுக்குப் பிறகு சிதிலமடைந்த கோட்டைப் படியில் அவளை மீண்டும் சந்திக்கிறான். "இப்போதாவது என்னுடன் இங்கேயே இருக்கலாமே!" என்று தீபா கேட்கும்போது, ஆகாஷ் சொல்லும் பதில் காவியம்:
"நாம் பார்க்கும் ஒளியும், நம்மைத் தீண்டும் காற்றும், நம் தலைக்கு மேல் இருக்கும் ஆகாசமும் ஒன்றுதான் என்றால்... அதை நாம் தனித்தனியாக எங்கிருந்து வேண்டுமானாலும் ஒன்றாக அனுபவிக்கலாமே!"
முடிவுரை: படத்தின் இறுதியில், இருளிச்சைகளை எல்லாம் கடந்து ஒரு அகண்டு விரிந்த ஆகாசமாக மாமா ஆகாஷும், தன் தனிமையையும் ஆன்மாவையும் நேசித்து ஒளிர்ந்து நிற்கும் சுடரியாக தீபாவும் சாட்சியாய் நிற்கிறார்கள். மனித மனதின் முரண்பாடுகளை எவ்வித திணிப்புமில்லாமல், கலைநயத்தோடு கடத்தியிருக்கும் ஒரு அரிய பொக்கிஷம் இந்த ‘நிஹாரிகா’.



AthibAn Tv