“அவ்வளவு கொடூரத்தனமா தாக்கியிருக்கிறார்கள்!” – அஜித்குமார் காவல் மரண வழக்கில் நீதிபதிகள் வேதனை
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயிலில் காவலாளியாக இருந்த அஜித்குமார் மரணம் தொடர்பான வழக்கின் விசாரணை, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம் மற்றும் ஏ.டி. மரியகிளாட் அமர்வில் இன்று (ஜூன் 1) நடைபெற்றது.
இந்த அமர்வில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் டாக்டர் அருள் சுந்தரேஷ் குமார் நேரில் ஆஜராகி, அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையை சமர்ப்பித்தார். அந்த அறிக்கையை பார்வையிட்ட நீதிபதிகள், “உடலில் ஒரு இடத்திற்கும் விலக்கு இல்லை. மிளகாய்த் தூள் தூவியுள்ளனர். இது வெறித்தனமான தாக்குதலாகும். ஒருவரை கொல்ல நினைப்பவர்கள்கூட இவ்வளவு கொடூரமாக நடந்து கொள்ள மாட்டார்கள். காயங்களைப் பார்க்கவே அதிர்ச்சி தருகிறது. அதிகாரத்தின் பெயரால் இப்படி நடந்திருக்கிறது. அஜித்குமார் மீது எந்த குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவில்லை. முதல் தகவல் அறிக்கை கூட இல்லை. இப்படி ஒருவரை அடிக்க முடியுமா?” என்று வேதனையுடன் கேள்வி எழுப்பினர்.
அதே நேரத்தில், அரசு தரப்பில், “வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. 5 சிறப்புப்படை காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். டிஎஸ்பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்ட எந்த அதிகாரியும் எதிர்பார்ப்பின்றி தண்டிக்கப்படுவார்” என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்த மனுதாரர் தரப்பு, “வழக்கு விசாரணை துவங்கிய பிறகே டிஎஸ்பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டது” என்று கூறியது. அதற்கு நீதிபதிகள், “தாமதமாகினாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டதற்காக பாராட்டலாம். இது போன்ற சம்பவங்களைத் தவிர்க்க அரசாங்கம் முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும்” எனக் கூறினர்.
அரசு தரப்பில், “சம்பவம் அரசியலாகக் கொண்டு செல்லப்படுகிறது” என்ற வாசகத்துக்கு, நீதிபதிகள், “நீங்கள் எதிர்க்கட்சி இருந்திருந்தால் இதைத்தான் செய்திருப்பீர்கள். சாத்தான்குளம் சம்பவத்தை மக்கள் இன்னும் மறக்கவில்லை. இது திட்டமிட்ட கொலை. ஒரு அரசு தன் குடிமகனை கொலை செய்துள்ளது. எனவே, இது சாதாரண வழக்காக அல்லாமல் தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும்” எனக் கண்டித்தனர்.
அரசு தரப்பில் மேலும், “விசாரணை நியாயமான முறையில் நடக்கிறது. தேவையெனில் சிபிஐக்கு மாற்றப்படலாம். அரசுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” எனத் தெரிவித்தனர்.
நீதிபதிகள், “சிபிஐ விசாரணை தேவை என்றால் எழுத்து மூலம் மனு தாக்கல் செய்யுங்கள்” என உத்தரித்தனர். மனுதாரர் தரப்பில், “சிபிஐ விசாரணை தாமதமாகும்” என்று கவலை தெரிவித்தனர். அதற்கு பதிலளித்த நீதிபதிகள், “அதனால்தான் சில வழக்குகளில் சிறப்புப் படைக்கு விசாரணை உத்தரவிடப்பட்டுள்ளது” என்று கூறினர்.
நீதிமன்ற உத்தரவு:
அஜித்குமார் காவல் மரண வழக்கு மதுரை 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் அவர்களிடம் மாற்றப்படுகிறது. அவர் உடனடியாக விசாரணையைத் தொடங்க வேண்டும். சிவகங்கை மாவட்ட காவல் துறையினர் அனைத்து ஆவணங்களையும் நாளை காலை ஒப்படைக்க வேண்டும். அவை மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பாதுகாக்கப்பட வேண்டும்.
விசாரணை தொடர்பான அறிக்கையை மாவட்ட நீதிபதி ஜூலை 8-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும். சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் அடுத்த கட்ட விசாரணை பற்றிய அரசுத் தரப்பின் அறிக்கையும் அதே நாளில் சமர்ப்பிக்க வேண்டும். சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிக்கு காவல் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். விசாரணை ஜூலை 8-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

