Type Here to Get Search Results !

கோரிக்கைகளுக்காக பாதயாத்திரை மேற்கொண்ட அரசு மருத்துவர்கள் கைதுக்கு சங்கங்கள் கண்டனம்

பாதயாத்திரையில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களை கைது செய்ததை மருத்துவர்கள் சங்கங்கள் கடுமையாக கண்டித்துள்ளன.

கொரோனா காலத்தில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவிக்கு அரசு வேலை மற்றும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும். மேலும், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவாக்கிய அரசாணை எண் 354-ன் படி, அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவர்கள் சட்டப்போராட்டக் குழுவின் தலைவர் எஸ். பெருமாள் பிள்ளை தலைமையில், சேலம் மாவட்டம் மேட்டூரிலிருந்து சென்னை வரை பாதயாத்திரை கடந்த 11ஆம் தேதி தொடங்கப்பட்டது.

இந்த பாதயாத்திரை, மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் நிறைவு பெறவிருந்தது. ஆனால், சைதாப்பேட்டையில் மருத்துவர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து, அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், “மருத்துவர்களின் சமரசமற்ற போராட்டங்களை அடக்க முயல்வது கடுமையாகக் கண்டிக்கப்படுகிறது. சமூக நீதி பேசும் அரசாங்கம் இவ்வாறு நடந்து கொள்வது வருத்தத்தக்கது” எனத் தெரிவித்துள்ளது.

மேலும், அரசு மருத்துவர்கள் சட்டப்போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ். பெருமாள் பிள்ளை வெளியிட்ட செய்திக்குறிப்பில், “பாதயாத்திரையில் பங்கேற்ற மருத்துவர்களை கைது செய்தது கண்டிக்கத்தக்கது. ஒவ்வொரு போராட்டத்தையும் கலைக்க அரசு முயற்சிக்கக் கூடாது. இதனால் அனைத்து அரசு மருத்துவர்களும் போராட்டத்திற்குள் இழுத்துச் செல்லப்பட வாய்ப்பு உள்ளது. முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அரசு மருத்துவர்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.