
தீவிர சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகளின் இறப்பை குறைக்கும் டெக்சாமெத்தசோன் மருந்தை, அதிக அளவில் தயாரிக்க சர்வதேச நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கொரோனா வைரசை தடுக்க முடியாமல் உலக நாடுகள் விழிப்பிதுங்கி நிற்கின்றன. அதற்கான தடுப்பு மருந்து குறித்த ஆராய்ச்சிகளை 6 மாதங்களாக உலக ஆராய்ச்சியாளர்கள் செய்து வருகின்றனர். ஆனால், இதுவரையில் கொரோனாவை முற்றிலும் குணமாக்கும் அதிகாரப்பூர்வ மருந்து இதுவரையில் கண்டறியப்படவில்லை. இந்நிலையில், ஆஸ்துமா, நுரையீரல் நோய்கள் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்படும் டெக்சாமெத்தசோன் மருந்து, தீவிர பாதிப்புள்ள கொரோனா நோயாளிகளின் இறப்பை 35 சதவீதம் அளவிற்கு குறைத்துள்ளதாக லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இந்த டெக்சாமெத்தசோன் மருந்தை தீவிர கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தும் வகையில் அதிக அளவில் தயாரிக்குமாறு சர்வதேச நாடுகளை உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. இதையடுத்து இந்த மருந்துக்கான தேவை, உலக அளவில் அதிகரித்துள்ளது. மேலும், மருத்துவக் கண்காணிப்பில் உள்ள தீவிர நோயாளிகளுக்கு மட்டுமே இந்த மருந்து பலனளிக்கும் என்றும், தொடக்க நிலையில் உள்ளவர்கள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இந்த மருந்தை பயன்படுத்தினால் பாதிப்பு ஏற்படுத்தக் கூடும் எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


AthibAn Tv