Type Here to Get Search Results !

இந்தியாவைக் கட்டுப்படுத்துவதே, சீனாவின் உடனடி நோக்கம்' என ஆய்வறிக்கை


இப்போ இந்தியா சீனா உறவு எப்படி ...

 இந்தியா - சீனா இடையே, எல்லை தொடர்பான பிரச்னை தீவிரமடைந்துள்ள நிலையில், 'தெற்காசியாவில் தன் நிலையை வலுப்படுத்திக் கொள்ள, இந்தியாவைக் கட்டுப்படுத்துவதே, சீனாவின் உடனடி நோக்கம்' என, ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹட்சன் மையம் சார்பில், ஒரு ஆய்வறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இந்த ஆய்வறிக்கையில், கொரோனா வைரஸ் காலத்தில், அமெரிக்கா - சீனா இடையே ஏற்பட்டுள்ள போட்டி குறித்து, விளக்கப்பட்டுள்ளது.இந்த வைரஸ் காலத்தை பயன்படுத்தி, அரசியல், ராணுவம் மற்றும் பொருளாதார பலன்களைப் பெற முயற்சிக்கும் சீனாவின் திட்டம் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையில், மேலும் கூறப்பட்டுள்ளதாவது:வளைகுடா நாடுகள் மற்றும் மேற்கு இந்தியப் பெருங்கடல் நாடுகளில், அமெரிக்காவின் தாக்கம் அதிகமாக உள்ளது.அதே நேரத்தில், தெற்காசியாவில், மிகவும் வலுவான நாடாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள, சீனா முயற்சித்து வருகிறது.

இந்நாட்டிற்கு, தென் மேற்கு, கிழக்கு அல்லது மத்திய ஆசியாவில் இல்லாத ஒரு பிரச்னை, தெற்காசியாவில், இந்தியாவின் ரூபத்தில் உள்ளது. இந்தியா, இயற்கையாகவே, ஆதிக்கம் நிறைந்த, மிகவும் வலுவான, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக உள்ளது. தன் முயற்சிக்கு, இந்தியா தடையாக உள்ளதாக சீனா கருதுகிறது.அதனால், தெற்காசியாவில் இந்தியாவின் வளர்ச்சியை, செல்வாக்கை மட்டுப்படுத்த வேண்டும்; தன்னுடைய வளர்ச்சிக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்க வைக்க வேண்டும் என்பதே, சீனாவின் உடனடி நோக்கம்.இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவில் பாதிப்பை ஏற்படுத்துவதும், அதன் இலக்காக உள்ளது.சீனாவுக்கு போட்டியை கொடுக்கும் நாடாக, இந்தியா உள்ளது. அந்நாடு, சீனாவை தன்னைவிட உயர்ந்த நாடாக பார்க்கவில்லை. தனக்கு இணையாகவே பார்த்து வருகிறது. அதனால் தான், இரு நாடுகளும் இணைந்து செயல்பட முடியாமல், ஒன்றுக்கொன்று போட்டியாக உள்ளன.

பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில், பொருளாதார திட்டங்களை செயல்படுத்த உதவுவது போல் முயற்சித்து, சீனா, அவற்றை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. இலங்கை கடனில் சிக்கியுள்ளது. அதில் இருந்து மீள்வதற்கு உதவினால், இலங்கையை, சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்து நீக்கிவிட முடியும். பாகிஸ்தான், எந்த நிலையிலும், சீனாவின் உறவை விலக்கி கொள்ளாது. அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த விரும்பினால், இந்தியாவுடனான உறவை மேலும் வளர்த்து கொள்ள வேண்டும். சர்வதேச அளவில் சீனாவின் வர்த்தகத்தை குறைக்க வேண்டும் என்றும் அமெரிக்கா நினைக்கிறது. இந்த சூழலில், அமெரிக்கா, ராணுவம் மற்றும் பொருளாதார ரீதியில், இந்தியாவுக்கு உதவ வேண்டும்.இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இந்த அறிக்கையில், தெற்காசிய பிரிவு குறித்த விபரங்களை, இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ஆராய்ச்சியாளர் டாக்டர் அபர்ணா பாண்டே மற்றும் அமெரிக்காவுக்கான முன்னாள் பாகிஸ்தான் துாதர், ஹுசைன் ஹக்கானி எழுதியுள்ளனர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.