
லடாக்கில் நடந்த மோதலைத் தொடர்ந்து, அசாதாரண சூழ்நிலைகளில் துப்பாக்கிகளை பயன்படுத்தி கொள்ள படை தளபதிகளுக்கு இந்திய ராணுவம் அனுமதி கொடுத்துள்ளது.
சமீபத்தில் லடாக்கின் கிழக்கு பகுதியில் இந்தியா - சீனா ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். 76 பேர் படுகாயமடைந்தனர். சீன தரப்பில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற தகவல் இல்லை. 43 பேர் வரை இறந்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது. கடந்த 1975ம் ஆண்டில் அருணாச்சல பிரதேசத்தின் தலுனுக் லா பாஸ் என்ற இடத்தில் ரோந்துபணியின் போது, அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் 4 பேர் சீன ராணுவத்தின் தாக்குதலில் வீரமரணம் அடைந்தனர்.
இதன்பின்னர் 45 ஆண்டுகளுக்கு பிறகு இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் தற்போது தான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 1996 மற்றும் 2005ம் ஆண்டுகளில் இந்தியா - சீனா நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தங்களின்படி, எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இரண்டு கிலோ மீட்டருக்குள் துப்பாக்கிகள் அல்லது வெடிக்கும் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், தற்போது லடாக்கில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, இந்த விதிகளில் இந்திய ராணுவம் மாற்றம் செய்துள்ளது. அசாதரண சூழ்நிலைகளில் துப்பாக்கிகளை பயன்படுத்தி கொள்ள படை தளபதிகளுக்கு இந்திய ராணுவம் அதிகாரம் அளித்துள்ளது. எல்லையில் சூழ்நிலையை சமாளிக்க ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ள நிலையில், இந்த புதிய விதிமுறைகளை ராணுவம் வகுத்துள்ளது.


AthibAn Tv