கொரோனா தொற்று பரவலுக்கு சீனா தான் காரணமென தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், கொரோனாவுக்கு ‛குங் ஃப்ளூ' என்ற புதிய பெயரை சூட்டியுள்ளார்.
கடந்தாண்டு சீனாவின் வூஹானில் இருந்து பரவ துவங்கிய கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை 90 லட்சத்து 23 ஆயிரத்து 895 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 லட்சத்து 69 ஆயிரத்து 382 பேர் பலியாகி உள்ளனர். 47 லட்சத்து 92 ஆயிரத்து 450 பேர் மீண்டுள்ளனர். கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் 23.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை 1.22 லட்சம் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு, வேலையிழப்பு உள்ளிட்டவற்றால் உலக பொருளாதாரம் மந்தநிலையை எதிர்கொண்டு வருகிறது.
அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் பதவிக்கு தேர்தல் நடக்கிறது. குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடேன் போட்டியிடுகிறார். அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. வழக்கமாக, அமெரிக்க அதிகாரிகள், கொரோனா வைரஸ் தொற்றை வூஹான் வைரஸ் என குறிப்பிட்டு வருகின்றனர். சனியன்று, ஓகலகாமாவில் அதிபர் தேர்தலுக்கான முதல் பிரசாரத்தை துவங்கிய டிரம்ப், 'கோவிட்-19 என்பது நோய் மற்றும் அதற்கு வரலாற்றில் எந்த நோய்க்கும் இல்லாத அளவுக்கு பல பெயர்கள் உள்ளது. நான் குங் ஃப்ளூ என பெயரிட்டுள்ளேன்.
நான் 19 வகையான வித்தியாசமான பெயர்களை வைக்க முடியும். பலர் இதனை வைரஸ் என அழைக்கின்றனர். பலர் இதை காய்ச்சல் என்று அழைக்கின்றனர். என்ன வித்தியாசம். நம்மிடம் 19 அல்லது 20 வகையிலான பெயர்கள் இருக்கிறதென நினைக்கிறேன்.' இவ்வாறு அவர் பேசினார். சீனாவின் பாரம்பரிய தற்காப்பு கலையான குங்ஃபூவை கிண்டலடித்து டிரம்ப் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.


AthibAn Tv