
கோவையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் இஎஸ்ஐ மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: கொரோனாவைரசின் வீரியம் அதிகரித்துள்ளதை நாங்கள் அறிந்துள்ளோம். வைரசின் வீரியத்தை குறைப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். கொரோனா தொற்றால் குழந்தைகள் யாரும் உயிரிழக்கவில்லை. பிறந்த 3 நாள் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தியுள்ளோம். தமிழகம் முழுவதும் டாக்டர்கள் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் பணி பாராட்டுக்குரியது.
கோவை ஈஎஸ்ஐ மருத்துவமனையில் கூடுதலாக 400 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. 80 சதவீதம் பேருக்கு அறிகுறியே இல்லை. 20 சதவீதம் பேருக்கு கடுமையான உடல்வலி, காய்ச்சல் ஏற்படுகிறது. அவர்களுக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது. ஆக்சிஜன் தேவைப்படும் நிலை அதிகமாக உள்ளது உண்மை. நோய் தொற்றை தடுக்க சுகாதார வழிகாட்டுதல்களின் படி நடவடிக்கை எடுத்துள்ளோம்.
சமூக பரவல் ஏற்பட்டுள்ளதா என்பதை மத்திய அரசு தான் அறிவிக்க வேண்டும். மீண்டும் கடுமையான ஊரடங்கு குறித்து மருத்துவ குழு பரிந்துரை பேரில் முதல்வர் முடிவெடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.


