Type Here to Get Search Results !

அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை வேகம் எடுக்கும் நிலையில் உள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு

latest tamil news

தற்போது கொரோனா வைரஸ், உலகளவில் தன்னை நன்றாக நிலை நிறுத்திக் கொண்டுள்ளதாகவும், அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை வேகம் எடுக்கும் நிலையில் உள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் உலக நாடுகளை மோசமாக பாதித்துள்ளன. தற்போதைய நிலவரப்படி அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா, பிரிட்டன் நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முன்னிலையில் உள்ளன. அமெரிக்காவில் மட்டும் 24 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவை பொறுத்தவரையில், கடந்த சில நாட்களாக ஒவ்வொரு நாளும் பாதிப்பானது 7 ஆயிரம், 8 ஆயிரம் என்ற ரீதியில் இருந்து வந்தது. ஆனால், சமீப நாட்களில் அந்த எண்ணிக்கை 13 ஆயிரம், 14 ஆயிரம் என உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 4.5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 14,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், ஜெனீவாவில் உலக சுகாதார அமைப்பின் அவசர கால திட்ட இயக்குனர் டாக்டர் மைக்கேல் ரேயான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் இப்போது கொரோனா பரிசோதனைகளை அதிகரித்து இருக்கின்றன. கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போவதை ஒரு சோதனையான நிகழ்வாக கருத வேண்டாம். இந்தியா, அமெரிக்கா போன்ற அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட நாடுகளில் தொற்றுநோய் பரவல் அதிகரிப்பது இயல்பானதுதான்.

அதிகளவில் பரிசோதனைகள் நடத்தப்படுவதால், தொற்று பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இப்போது கொரோனா வைரஸ், உலகளவில் தன்னை நன்றாக நிலை நிறுத்திக்கொண்டு விட்டது. தற்போது அது பல நாடுகளிலும் உச்சத்தில் இருக்கிறது அல்லது உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, தெற்காசியா, மத்திய கிழக்கு நாடுகளும், ஆப்பிரிக்க நாடுகளும் கூட இப்போது ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்புக்கு காரணமாக அமைந்துள்ளன. அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை என்பது நிச்சயமாக வேகம் எடுக்கிற நிலைதான் இப்போது உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், ‛‛கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலும் சரி, இறப்பிலும் சரி சில நாடுகள் அதிரடியாக ஏற்றம் கண்டு வருகின்றன. சில நாடுகள் தொற்று பரவலை கட்டுப்படுத்தினாலும், பொருளாதார, சமூக நடவடிக்கைகளை திறந்து விட்டுள்ளதால் மீண்டும் தொற்று பரவல் அதிகரித்துள்ளன,'' என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.