
'இரு தரப்பு ஒப்பந்தங்களை மீறி, எல்.ஏ.சி., எனப்படும் உண்மையான கட்டுப்பாடு பகுதியில், மே மாத துவக்கத்தில் இருந்தே சீனா தன் ராணுவத்தை குவித்தது. 'அங்குள்ள நிலைமையை மாற்ற முயன்றதால் தான், இரு ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. எல்லை பிரச்னைக்கு சீனாவே காரணம்' என, வெளியுறவுத் துறை கூறியுள்ளது.
எல்லையில், சீனா - இந்தியா இடையே ஏற்பட்டுள்ள மோதல் குறித்து, 'ஆன்லைன்' மூலமாக, நம் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர், அனுராக் ஸ்ரீவத்சவா கூறியதாவது: மே மாத துவக்கத்தில் இருந்தே, உண்மையான கட்டுப்பாடு பகுதியில், சீனா தன் படைகளை குவிக்கத் துவங்கியது. கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதியில், நம் படைகள் மேற்கொள்ளும் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளுக்கு இடையூறு செய்தது. திடீரென அதிக அளவில் படைகளை குவித்த சீனா, அங்குள்ள நிலைமையை மாற்ற முயன்றது.
இது தொடர்பாக, துாதரகம் மூலமாகவும், ராணுவம் மூலமாகவும் சீனாவுக்கு நம்முடைய எதிர்ப்பை தெரிவித்தோம். எல்லைப் பகுதியில் மாற்றங்கள் செய்வதை ஏற்க முடியாது என்பதை உறுதிபட கூறினோம்.அதைத் தொடர்ந்து, ஜூன், 6ம் தேதி, மூத்த கமாண்டர்கள் நிலையில் பேச்சு நடந்தது. அதில், எல்லையில் பதற்றத்தை தணிக்க, இரு தரப்பும், ராணுவத்தை படிப்படியாக விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. மேலும், எல்லை பகுதியில் எந்த கட்டுமானப் பணிகளையும் செய்யாமல், ஏற்கனவே இருந்த நிலையைத் தொடருவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
ஆனால், இந்த உறுதிமொழியை, நம்முடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை, சீனா மீறியது. எல்லையில், உண்மையான கட்டுப்பாடு பகுதியில் கட்டுமானப் பகுதிகளை சீனா மேற்கொண்டது. அதை நம்முடைய படைகள் முறியடித்தன. அப்போது தான், ஜூன், 15ம் தேதி இரு ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், உயிர் பலி நேர்ந்தது.அதைத் தொடர்ந்தே, எல்லையில் நாம் அதிக அளவில் படைகளை குவித்தோம். அதே நேரத்தில், துாதரக உறவு மற்றும் ராணுவம் மூலம் பேச்சும் தொடர்ந்தது.
எல்லையில் அமைதியை பராமரிப்பது தொடர்பாக, 1993ல் செய்து கொண்ட ஒப்பந்தம் உள்ளிட்டவற்றை, சீனா அப்பட்டமாக மீறியுள்ளது. அதனால் தான், நம்முடைய படைகளை குவிக்க நேர்ந்தது. எல்லையில் நடக்கும் பிரச்னைகளுக்கு, சீனாவே முழு காரணம்.இவ்வாறு, அவர் கூறினார்.
நிலைப்பாட்டுக்கு வெற்றி:
உலக அளவில் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதை கண்காணிக்கும், எப்.ஏ.டி.எப்., எனப்படும் நிதி நடவடிக்கை பணிக் குழு வெளியிட்டுள்ள பட்டியலில், 'கிரே' எனப்படும் மோசமான நாடுகள் பட்டியலில், பாகிஸ்தான் தொடர்ந்து உள்ளது.
இது குறித்த கேள்விக்கு, ''தன் மண்ணில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க மறுக்கிறது என்ற நம்முடைய நிலைப்பாட்டை உறுதி செய்வதாக இந்த முடிவு உள்ளது, '' என, அனுராக் ஸ்ரீவத்சவா கூறினார்.


AthibAn Tv