Type Here to Get Search Results !

தேசிய மக்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மீண்டும் ஆதரவு மணிப்பூரில் பா.ஜ.க அரசுக்கு ஏற்பட்ட ஆபத்து நீங்கியுள்ளது

BJP-led govt in Manipur back in saddle as 4 NPP MLAs withdraw ...

மணிப்பூரில் பா.ஜ.க அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தெரிவித்திருந்த தேசிய மக்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மீண்டும் ஆதரவு அளிப்பதாக கவர்னரிடம் நேற்று தெரிவித்தனர். இதையடுத்து பா.ஜ. க அரசுக்கு ஏற்பட்ட ஆபத்து நீங்கியது.

வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்வர் பிரேன் சிங் தலைமையிலான பா.ஜ. க ஆட்சி நடக்கிறது. இங்கு 2017ல் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும் மற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன் பா.ஜ., ஆட்சி அமைத்தது.

இந்நிலையில் பா.ஜ., அரசுக்கு ஆதரவு அளித்து வந்த கன்ராட் சங்மாவின் தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த நான்கு எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இவர்கள் நான்கு பேரும் அமைச்சர்களாக இருந்தவர்கள் என்பதால் அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தனர். இதற்கிடையே பா.ஜ.,வை சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ.,க்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். இதனால் பா.ஜ. அரசு கவிழும் சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில் தேசிய மக்கள் கட்சியின் தலைவரும் மேகாலயா மாநில முதல்வருமான கன்ராட் சங்மா மற்றும் அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் டில்லியில் கடந்த இரண்டு நாட்களாக அமித் ஷா உள்ளிட்ட பா.ஜ., மூத்த தலைவர்களுடன் பேச்சு நடத்தினர். இதில் தேசிய மக்கள் கட்சியினர் எழுப்பியுள்ள பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என அமித் ஷா உறுதி அளித்ததை அடுத்து பிரேன் சிங் அரசுக்கு அளித்த ஆதரவை விலக்கும் முடிவை கைவிடுவதாக தேசிய மக்கள் கட்சி தலைவர்கள் அறிவித்தனர்.

இதையடுத்து இம்பாலில் உள்ள கவர்னர் மாளிகைக்கு தேசிய மக்கள் கட்சியின் தலைவர் சங்மா பா.ஜ., மூத்த தலைவர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஆகியோர் சென்றனர். இவர்களுடன் ஏற்கனவே பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்த நான்கு அமைச்சர்களும் சென்றனர். அப்போது பா.ஜ., அரசுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதாகவும் ராஜினாமா முடிவை கைவிடுவதாவும் அமைச்சர்கள் நான்கு பேரும் கவர்னரிடம் உறுதி அளித்து அறிக்கை தாக்கல் செய்தனர்.

இதையடுத்து கவர்னர் நஜ்மா ஹெப்துல்லா 'பதவியை ராஜினாமா செய்த நான்கு பேரும் அந்த முடிவை வாபஸ் பெறுவதாகவும் பா.ஜ.க அரசுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதாகவும் கூறியுள்ளனர்' என அறிக்கை வெளியிட்டார். நான்கு பேரும் முதல்வர் பிரேன் சிங்கையும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதையடுத்து மணிப்பூரில் பா.ஜ.க அரசுக்கு ஏற்பட்ட ஆபத்து நீங்கியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.