நாளை (ஜூன் 19) முதல் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு அமலாக உள்ள நிலையில், சென்னையில் இருந்து பலர் வாகனங்களில் தென் மாவட்டங்களுக்கு செல்கின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இன்று நள்ளிரவு முதல் ஜூன் 30 வரை முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இதனால் இரவோடு இரவாக வெளிமாவட்டத்தில் உள்ள சொந்த ஊர் அல்லது உறவினர்கள் வீடுகளுக்கு செல்ல சென்னை மக்கள் கிளம்பி வருகின்றனர். இதனால், வெளிமாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கும் எளிதில் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து சென்னையில் இருந்து செங்கல்பட்டு சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளன. இதனால் செங்கல்பட்டின் பரனூர் சுங்கச்சாவடியில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் வரிசையாக நிற்கின்றன. இ-பாஸ் அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டுமே பிற மாவட்டங்களுக்குள் அனுமதிக்கப்படுகின்றன. மற்ற வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. இதுதவிர உரிமம், தலைக்கவசம், முகக்கவசம் இல்லாமல் வரும் இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்கின்றனர்.
தற்போது வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 24 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
இன்று மட்டும் காலையில் இருந்து தற்போது வரை 50க்கும் மேற்பட்ட வாகனங்களை செங்கல்பட்டு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், சென்னையிலிருந்து, தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்ய போலீசாருக்கு கண்ணன் உத்தரவிட்டார். இதனையடுத்து வண்டலூர், பரனூர், ஆத்தூர் ஆகிய சுங்கச்சாவடிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.


AthibAn Tv