அ.தி.மு.க.வில்தான் கடைசி வரை இருப்பேன்; உள்ளாட்சித் தேர்தலில் வெல்வோம்: மதுரையில் செல்லூர் ராஜு அதிரடி!
மதுரை: "நான் எங்கும் செல்லமாட்டேன், அ.தி.மு.க.வில் கடைசி வரை ஒரு சாதாரண தொண்டனாகவாவது நீடிப்பேன்" என்று முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. மூத்த தலைவருமான செல்லூர் ராஜு உறுதிபடத் தெரிவித்துள்ளார். மதுரை மாநகர அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் பனகல்சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அவரது தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மறைந்த இயக்குநர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.
த.வெ.க. ஒரு கானல் நீர்!
அண்மைக்கால அரசியல் மாற்றங்கள் மற்றும் த.வெ.க குறித்தான கேள்விக்கு பதிலளித்த செல்லூர் ராஜு, "அ.தி.மு.க.வில் இருந்து மாற்றுக் கட்சிக்குச் சிலர் சென்றுள்ளனர். ஆனால், கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் யாரும் எங்கும் வெளியேறவில்லை. அ.தி.மு.க என்பது பாசமும் குடும்பப் பிணைப்பும் கொண்ட ஒரு இயக்கம். அங்கு சென்றவர்கள் எதற்காகச் சென்றார்கள் என்று தெரியவில்லை. எங்களது வாக்குகள் சில த.வெ.க.விற்குச் சென்றிருக்கலாம், ஆனால் இனி அது நடக்காது. த.வெ.க என்பது மின்மினிப் பூச்சி, பட்டாம்பூச்சி போல தற்காலிகமானது; அது ஒரு கானல் நீராக மாறும். வரும் உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க மிகப்பெரிய வெற்றியைப் பெறும்" என்றார்.
மதுரை வளர்ச்சி குறித்து அமைச்சருக்குக் கேள்வி
மதுரையின் தற்போதைய உள்கட்டமைப்பு மற்றும் ஆளுங்கட்சி அமைச்சரின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்த அவர், "அமைச்சர் இப்போது அதிகமாகப் பேசி வருகிறார். அவர் முன்பு எங்கள் கட்சியில் இருந்தவர்தான், அங்கு சென்று இப்போது அமைச்சராகிவிட்டார். தற்போது மதுரையில் அவர் சொகுசாகப் பயணிக்கும் சாலைகளும், மேம்பாலங்களும் அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டவைதான். அதை விடுத்து, மதுரைக்கு அமைச்சராக நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை முதலில் சொல்லுங்கள்?" என்று கேள்வி எழுப்பினார். மேலும், சிறுவயது முதலே எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகியாக வளர்ந்த தன்னைப்பற்றி யார் கேலி கிண்டல் செய்தாலும், அதைப் பற்றித் தான் என்றுமே கவலைப்படுவதில்லை என்றும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.



AthibAn Tv