Type Here to Get Search Results !

கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற 52 இந்தியர்கள் நேபாளத்தில் தவிப்பு: வெளியுறவு அமைச்சகம் அவசர அறிவுறுத்தல்!



கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற 52 இந்தியர்கள் நேபாளத்தில் தவிப்பு: வெளியுறவு அமைச்சகம் அவசர அறிவுறுத்தல்!

காத்மாண்டு: சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் பகுதியில் அமைந்துள்ள கைலாஷ் மானசரோவர் பனிமலைக்குத் புனித யாத்திரை சென்ற 52 இந்திய பக்தர்கள், போதிய விசா மற்றும் நுழைவு ஆவணங்கள் இல்லாததால் நேபாளத்தில் தவித்து வரும் பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, உரிய ஆவணங்கள் இன்றி பக்தர்கள் யாரும் பயணத்தைத் தொடங்க வேண்டாம் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

தனியார் நிறுவனங்களின் குளறுபடி

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்வது வழக்கமாகும். இந்த ஆண்டுக்கான யாத்திரை சமீபத்தில் தொடங்கிய நிலையில், கடந்த 20-ஆம் தேதி முதல் குழுவினர் இந்திய-சீன எல்லையான நாதுலா பாஸ் வழியாகப் பயணத்தைத் தொடங்கினர். ஆனால், நேபாளம் வழியாகச் சென்ற பக்தர்களில் 52 பேரிடம் சீன நாட்டின் விசா மற்றும் திபெத்திற்குள் நுழைவதற்கான முறையான அனுமதி ஆவணங்கள் இல்லை எனக் கூறப்படுகிறது. இவர்களை அழைத்துச் சென்ற தனியார் பயண நிறுவனங்கள் (Private Travel Agencies) அதற்கான முழுமையான ஏற்பாடுகளைச் செய்யாததே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. இதனால், மேற்கொண்டு பயணம் செய்ய முடியாமல் அந்த 52 பக்தர்களும் நேபாளத்திலேயே தவித்து வருகின்றனர்.

மத்திய அரசுக்கு எம்.பி. கோரிக்கை

இந்த விவகாரம் குறித்து தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் பிரிவு) கட்சியைச் சேர்ந்த சுப்ரியா சுலே எம்.பி., தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நேபாளத்தில் தவிக்கும் இந்தியப் பக்தர்களின் நிலையைச் சுட்டிக்காட்டிய அவர், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, அங்கு தவிக்கும் இந்தியர்களை மீட்கவும் அவர்களுக்கு உதவவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெளியுறவு அமைச்சகத்தின் முக்கிய அறிக்கை

இச்சம்பவம் குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்ல விரும்பும் பக்தர்கள், அதற்கான விசா உள்ளிட்ட அனைத்து பயண ஆவணங்களும் தங்களுக்குக் கிடைத்துவிட்டதை முழுமையாக உறுதி செய்துகொள்ள வேண்டும். முறையான அனுமதி மற்றும் ஆவணங்கள் கையில் கிடைக்கும் வரை, பக்தர்கள் யாரும் தங்களது இருப்பிடத்தில் இருந்து யாத்திரைப் பயணத்தைப் புறப்பட்டுச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்."

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.