
சீனாவுடனான எல்லை பிரச்னையில், பிரதமர் மோடி அரசின் மீது நம்பிக்கை இருப்பதாகவும், ஒரு அங்குல நிலம் கூட போகாது என லடாக் எம்.பி ஜம்யங் செரிங் நம்கியால் தெரிவித்துள்ளார்.
லடாக் மற்றும் சிக்கிமில், சீனாவை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் மேற்கொள்ளும் வழக்கமான ரோந்து பணிகளின் போது, சீன ராணுவத்தினர் இடையூறு ஏற்படுத்துவதாக, இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது. இதை மறுத்துள்ள சீனா, இந்திய ராணுவத்தினர் தான், எல்லை தாண்டி வருவதாக அபாண்டமாக கூறி வருகிறது. இதையடுத்து, இரு நாடுகளும் எல்லையோரம் ராணுவத்தை குவித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இருநாட்டு ராணுவ உயரதிகாரிகள் மட்டத்திலான பேச்சில், எல்லை பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக தீர்க்க ஒப்புகொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் மூன்று நாள் பயணமாக, இந்தியா - சீனா படைகள் குவிக்கப்பட்ட கிழக்கு லடாக் பகுதிக்கு சென்ற லடாக் பா.ஜ.,எம்.பி ஜம்யங் செரிங் நம்கியால், எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள பாங்கோங் த்சோ ஏரி ஒட்டிய பகுதியில் வசிக்கும் மக்களின் குறைகளை கேட்டறிந்ததுடன், மக்களின் பாதுகாப்பு மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உறுதியளித்தார்.
இது தொடர்பாக பா.ஜ.எம்.பி., நம்கியால் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'எங்கள் அண்டை நாடுகளுடன் எந்தவொரு மோதலையும் நாங்கள் விரும்பவில்லை, அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். பிரதமர் மோடியின் தலைமையில் மிகவும் திறமையான அரசாங்கம் நம்மிடம் உள்ளது. அவர் மிகவும் தேசபக்தி, ஆற்றல் மிக்கவர் மற்றும் நன்கு பாதுகாக்கப்பட்ட மற்றும் மிகவும் வலுவான தேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உறுதியுடன் உள்ளார். பிரதமர் மோடியின் தலைமையில், ஒரு அங்குல இந்திய நிலம் கூட போகாது என்று நாட்டு மக்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது'
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தியா - சீன எல்லையில் பதற்றம் நீடித்த நிலையில், இது நம்கியாலின் இரண்டாவது பயணம் ஆகும். முன்னதாக மே 18ம் தேதி அன்று சுமூர், ஹான்லி, கொயுல், டெம்ஜோக், புச்சே, டங்டி மற்றும் சாகான் ஆகிய இடங்களுக்கு பயணம் செய்திருந்தார்.


AthibAn Tv