
“உலக நாடுகள்,கொரோனா வைரஸ் மீது கவனம் செலுத்தி வரும் நிலையில், அதைப் பயன்படுத்தி, சீனா தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது,” என அமெரிக்க செனட் உறுப்பினர் ஜிம் இன்ஹோப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அமெரிக்க செனட் உறுப்பினர் ஜிம் இன்ஹோப், சீனாவை விமர்சித்து நேற்று கூறியதாவது: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, உலக நாடுகள் பல முயற்சிகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், அந்நாடுகள் மீது, சீனா பல தாக்குதல்களை நடத்தி வருகிறது.இந்தியாவில், ராணுவ வீரர்கள், 20 பேரை கொன்று, சீன ராணுவம் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. சர்ச்சைக்குரிய தென் சீன கடல் பகுதியை உரிமை கொண்டாடும், தைவான், மலேஷியா, வியட்நாம், இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளை ஆத்திரமூட்டும் வகையில், சீனா, பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சீனா மற்றும் ரஷ்யா, ராணுவத்தில் அதிகம் முதலீடு செய்கின்றன. இதன்மூலம், அவர்களின் ராணுவ திறன் மேம்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும், ஆக்ரோஷமாக வளர்ந்து வருகின்றன. அமெரிக்காவை வீழ்த்தவேண்டும் என, சீனா முயற்சிக்கிறது; அது நடக்காத காரியம். உலகின் மிக வலிமையான ராணுவம் எங்களிடம் உள்ளது. அதை எங்கள் எதிரிகள், முதலில் உணர வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
இதற்கிடையே, அதிபர் டிரம்ப் மீது, ஜனநாயக கட்சி செனட் உறுப்பினர் ராமர்ட் மெனன்டெஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து, அவர் கூறியதாவது: கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு, 'வென்டிலேட்டர்'களை வினியோகம் செய்ய, 1,511 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. எனினும், அந்த நாடுகள் அனைத்தும், அதிபர் டிரம்பால் தேர்வு செய்யப்பட்டவை. தேவைப்படும் நாடுகளுக்கு, வென்டிலேட்டர்கள் வழங்கப்பட வேண்டும். ஆனால், குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டுமே, இந்த நிவாரண உதவிகள் செய்யப்படுகின்றன. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


AthibAn Tv