Type Here to Get Search Results !

இந்தாண்டு இந்திய முஸ்லீம்கள் ஹஜ் புனித பயணம் செல்ல மாட்டார்கள் முக்தர் அப்பாஸ் நக்வி

இந்த ஆண்டு ஹஜ் பயணம் இல்லை: நக்வி ...

கொரோனா தொற்று காரணமாக இந்தாண்டு இந்திய முஸ்லீம்கள் ஹஜ் புனித பயணம் செல்ல மாட்டார்கள் என மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களின் வாழ்வின் முக்கிய கடமைகளில் ஒன்றாக கருதப்படும் ஹஜ் புனித யாத்திரை அடுத்த மாதம் துவங்க உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் மெக்கா மற்றும் மதினா நகருக்கு வருகை தருவார்கள். இந்நிலையில் ஹஜ் புனித யாத்திரை தொடர்பாக சவுதி அரேபிய அரசு நேற்று புதிய அறிவிப்பை வெளியிட்டது. மெக்கா நகருக்கு மக்கள் புனித பயணம் மேற்கொண்டால் தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது சாத்தியமில்லை. எனவே இந்தாண்டு வெளிநாடுகளில் இருந்து புனித பயணத்திற்கு வருவோருக்கு அனுமதி அளிக்கப்படாது. சவுதியில் வசிக்கும் வெளிநாட்டினர் ஹஜ் பயணம் மேற்கொள்ளலாமென அறிவித்திருந்தது.

இது குறித்து மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியதாவது: இந்தாண்டு வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள சவுதி அரேபிய அரசு தடை விதித்துள்ளதை இந்தியா வரவேற்கிறது. மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக இந்தியாவில் இருந்து முஸ்லீம்கள் ஹஜ் புனித பயணத்திற்கு செல்ல மாட்டார்கள். ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பித்த 2.3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு ரத்து செய்ததற்கு கட்டணம் பிடித்தம் இல்லாமல் நேரடியாக தொகை திருப்பி செலுத்தப்படும்.

சவுதியின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் முகமது சலேஹ் பின் தாஹர் பெண்டனுடன் தொலைபேசியில் பேசினேன். கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து யாத்ரீகர்களை அனுப்ப வேண்டாம் என்று அவர் கேட்டுகொண்டார். மேலும் கடந்த 2019ல் 2 லட்சம் இந்தியர்கள் ஹஜ் பயணம் சென்றனர். அதில் 50 சதவீதம் பெண் யாத்ரீகர்கள் எனவும், ஆண் துணை இல்லாமல் 3,040 பேர் சென்று வந்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.