இந்தியா - சீனா இடையே எல்லையில் மோதல் நீடித்து வரும் நிலையில், எல்லையை ஒட்டிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் 32 சாலை கட்டுமான பணிகளை விரைவுபடுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தோ - சீனா எல்லை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகள் குறித்து உள்துறை அமைச்சகம் நேற்று (ஜூன் 22) ஆய்வு மேற்கொண்டது. இதில் மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள், எல்லை சாலை அமைப்பு (பி.ஆர்.ஓ), இந்தோ - திபெத்தியன் எல்லை போலீசார் உள்பட பல அமைப்புகளை சேர்ந்த உயரதிகாரிகள் பங்கேற்றனர். அதில் சீன எல்லையை ஒட்டிய பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் 32 சாலை கட்டுமான பணிகளை விரைவுப்படுத்தவும், அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து விரைந்து பணிகளை முடிக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
மொத்தம் இந்திய - சீன எல்லை ஒட்டியுள்ள பகுதியில் 73 கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய பொதுப்பணித்துறை 12, பி.ஆர்.ஓ 61 கட்டுமான பணிகளை உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக லடாக்கில் மிகவும் முக்கியமான 3 சாலைகளை பி.ஆர்.ஓ அமைத்து வருகிறது. சாலை வசதி தவிர, எல்லை பகுதியில், மின்சாரம், மருத்துவமனை, தொலைதொடர்பு, கல்வி ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில வருடங்களாக எல்லை பகுதிகளில் சாலை அமைக்கும் பணி வேகமாக நடைபெறுகிறது.
2008-17ம் ஆண்டுகளில் 230 கி.மீ அளவுக்கு சாலை உருவாக்கப்பட்டது. இதனோடு ஒப்பிடுகையில், 2017-20ம் ஆண்டுகளில் 470 கி.மீ தொலைவுக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. சாலையை மேம்படுத்தும் பணிகள் 2008-17ல் 170 கி.மீ மட்டுமே நடந்தது. ஆனால் 2017-20 380 கி.மீ தொலைவு மேம்படுத்தப்பட்டுள்ளது. 2008-14ம் ஆண்டுகளில் 3,610 கி.மீ தொலைவுக்கு சாலைகள் அமைக்கப்பட்டது. இதனோடு ஒப்பிடுகையில், 2014-20ம் ஆண்டுகளில் மொத்தம் 4,764 கி.மீ தொலைவுக்கு சாலைகள் அமைக்கப்பட்டது.
இதேபோன்று, பட்ஜெட்டில் சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. 2008-16 வரை ஆண்டுக்கு சாலை அமைப்பதற்கான பட்ஜெட் ரூ.3,300 கோடி முதல் ரூ.4,600 கோடியாக இருந்தது. எல்லைப்பகுதியில் சாலை அமைக்க 2017-18ல் ரூ.5,450 கோடி, 2018-19ல் ரூ.6,700 கோடி, 2019-20ல் ரூ.8,050 கோடி, 2020-21ல் ரூ.11,800 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.


AthibAn Tv