Type Here to Get Search Results !

''சர்வதேச சட்ட நடைமுறைகளை ஒவ்வொரு நாடும் மதித்து நடப்பதே வளர்ச்சிக்கு வழி வகுக்கும்,''

அமைச்சர் ஜெய்சங்கர் குஜராத்தில் ...

''சர்வதேச சட்ட நடைமுறைகளை ஒவ்வொரு நாடும் மதித்து நடப்பதே, பல தரப்பு நாடுகள் இணைந்த கூட்டமைப்பின் நிலையான வளர்ச்சிக்கு வழி வகுக்கும்,'' என, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனையில், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.

இந்திய - சீன எல்லையில் பதற்றமான சூழல் நிலவும் நேரத்தில், ரஷ்யா, சீனா, இந்தியா ஆகியவற்றின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்துக்கு, ரஷ்யா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில், கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, பொருளாதார மந்தநிலை, சர்வதேச பாதுகாப்பு ஆகியவை தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதில், எல்லையில் சீனாவின் அத்துமீறல் தொடர்பாகவும் பேசப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், கூட்டத்தின் துவக்கத்தில், ஜெய்சங்கர் பேசியதாவது:இரண்டாம் உலகப்போர் முடிந்து, 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கூட்டத்தில் பங்கேற்க, இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு நன்றி.இரண்டாம் உலகப் போரில் நாஜிப் படையினருக்கு எதிரான வெற்றியில், பல்வேறு நாடுகளுக்கும் பங்கு உள்ளது. இதில், இந்தியாவுக்கும் முக்கிய பங்கு உள்ளது. உலகின் பல இடங்களில் நடந்த போரில், இந்தியர்கள் ரத்தம் சிந்தியுள்ளனர். போர் சூழ்நிலையில், சீனாவுக்கும், ரஷ்யாவுக்கும் தேவையான பொருட்கள் தடைபடாமல் கிடைப்பதற்கு இந்தியா மிகப் பெரிய உதவி செய்தது.

ஆனால், இந்தியாவுக்கு இதற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. கடந்த, 75 ஆண்டுகளில் உலகில் பல மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. ஆனாலும், இந்தியாவுக்கு எதிரான வரலாற்று அநீதி இன்னும் சரி செய்யப்படவில்லை. பல தரப்பட்ட நாடுகள் இணைந்த ஒரு கூட்டமைப்பில், ஒவ்வொரு நாடும் சர்வதேச சட்ட நடைமுறைகளை மதித்து நடக்க வேண்டும்.

நட்பு நாடுகளின் நியாயமான பிரச்னைகளை அங்கீகரிக்க வேண்டும். அப்போது தான், பல்வேறு நாடுகள் இணைந்த கூட்டமைப்பு, நிலையான வளர்ச்சியை எட்ட முடியும். பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை அங்கீகரித்தல், பொதுவான விஷயங்களை ஊக்குவித்தல் ஆகியவை மிகவும் முக்கியமான விஷயங்கள். இன்றைய ஆலோசனை கூட்டம், இதற்கு வழி வகுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.