
அமெரிக்க - கனடா எல்லையில் வானில் ஒரேநேரத்தில் இரண்டு சூரியன்கள் இருப்பது போன்ற புகைப்படம், ஹண்டர் மூன் என்ற பெயரில் சமூகவலைதளங்களில் வைரலானது. ஆனால் அது போலியானது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது, சூரியனுக்கும் - பூமிக்கும் இடையில் நிலவு இருக்கும். அப்போது சூரிய ஒளியை நிலவு மறைப்பதால், அதன் நிழல் பூமியில் தெரியும். இது சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. அரிய நிகழ்வான இந்தாண்டின் முதல் சூரியகிரகணம் நேற்று (ஜூன் 21) காலை 10.22 மணிக்கு துவங்கி பிற்பகல் 3.04 மணி வரை நீடித்தது. முழு சந்திர கிரகணம் பிற்பகல் 12:10 மணிக்கு நிகழ்ந்தது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சூரிய கிரகணம் தென்பட்டது.
இந்நிலையில் சமூகவலைதளமான டுவிட்டரில், அமெரிக்க - கனடா எல்லையில் இரண்டு சூரியன்கள் இருப்பது போன்ற பல புகைப்படங்களும் அடுத்தடுத்து பரவியது.
பூமியின் அச்சு மாறும் போது சூரியனின் ஒளியால் சந்திரன் இது போன்று தோற்றமளிக்குமெனவும், இது மூன் ஹண்டர்ஸ் எனவும் கூறப்பட்டிருந்தது. ஆனால் இது முழுக்க போலியானது ஆகும். இவையனைத்தும் கடந்த 2015 முதல் ஒவ்வொரு சூரியகிரகணம் நிகழும் போது வைரலாகி வருகிறது. இரண்டு சூரியன்கள் இருப்பது போன்ற மாயை மிகவும் அரிதானது மற்றும் வளிமண்டலத்தில் பனி படிகங்களின் முன்னிலையில் மட்டுமே காணப்படும். அதுவும் மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு கீழ் மட்டுமே நிகழும். பனிக்கட்டியில் சூரியனின் உருவம் விழும் போது இரண்டு சூரியன் இருப்பது போல தோன்றும். இது சில நேரங்களில் மூன்று சூரியன் இருப்பது போன்ற மாயை தோற்றத்தை ஏற்படுத்தும். இந்த நிகழ்வு ஆன்டெலியன் நிகழ்வு என்று அழைக்கப்படுகிறது.


AthibAn Tv