
2020-21ம் நிதியாண்டின் அடுத்த தவணையாக தமிழகத்திற்கு ரூ.335.41 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2020-21ம் ஆண்டிற்கான மாநிலங்களுக்கிடையேயான நிதிப்பகிர்வின் வாயிலாக மத்திய வருவாயிலிருந்து தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய 15வது நிதிக்குழு பரிந்துரை செய்துள்ளது. அதில் ஏற்கனவே மத்திய அரசிடம் இருந்து ரூ.1928.56 கோடி தமிழகத்திற்கு விடுக்கப்பட்டுள்ளது. இந்த தொகையானது 2020-21ம் ஆண்டிற்கான மத்திய அரசிடமிருந்து, மத்திய வரி வருவாயிலிருந்து தமிழகத்திற்கு வழங்கக்கூடிய மொத்த பங்குத்தொகையான ரூ.32,849 கோடியின் முதல் தவணை என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், 15வது நிதிக்குழு பரிந்துரைப்படி 14 மாநிலங்களுக்கு ரூ.6,195.08 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதன்படி, அடுத்த தவணையாக தமிழகத்திற்கு ரூ.335.41 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளதாகவும், கொரோனா வைரஸ் நெருக்கடி சூழலில், இந்த கூடுதல் நிதி ஆதாரம் பயனளிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சொட்டு நீர் பாசனத்திட்டம்:
அதேபோல், சொட்டு நீர் பாசனத்திட்டத்துக்கு மாநிலங்களுக்கு ரூ.4000 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் ரூ.478.79 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதி மூலம் 1.76 ஹெக்டேர் நிலம் பயனடையும் எனக் கூறப்படுகிறது.


AthibAn Tv