
காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில், 2 பயங்கரவாதிகள் சுட்டுகொல்லப்பட்டனர். சி.ஆர்.பி.எப் வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள பண்ட்ஸூ என்னுமிடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்று (ஜூன் 23) அதிகாலை, சி.ஆர்.பி.எப் 182வது பட்டாலியனை சேர்ந்த வீரர்கள், போலீசாருடன் இணைந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மறைந்திருந்த பயங்கரவாதி, பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினான். இதில் பலத்த காயமடைந்த சி.ஆர்.பி.எப் வீரர் ஒருவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்தார். தொடர்ந்து நடந்த மோதலில், பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், துப்பாக்கிச்சண்டை நடந்த இடத்தில் 2 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் பயங்கரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. வேறு பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளார்களா என தேடுதல் வேட்டை தொடர்கிறது என்றார். ஜூன் மாதத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுகொன்றுள்ளனர். இந்தாண்டு நடைபெற்ற பல்வேறு மோதல்களில் இதுவரை 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.


AthibAn Tv