
சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட, 19 நோயாளி களுக்கு, 'பிளாஸ்மா' சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு, நல்ல பலன் கிடைத்துள்ளதால், டாக்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனா வைரசுக்கு, தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில், இந்தியா உட்பட பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. கொரோனா பாதிப் பில் இருந்து குணமடைந்தோர் ரத்தத்தை தானமாக பெற்று, அதில் உள்ள பிளாஸ்மாவை மட்டும் பிரித்து, பாதிக்கப்பட்டோரின் உடலில் செலுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.இந்த சிகிச்சைக்கு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகத்தில், சென்னை ராஜிவ் காந்தி, ஓமந்துாரார், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை, மதுரை, வேலுார் சி.எம்.சி., மருத்துவமனைகளில், இந்த சிகிச்சை தர, மத்திய அரசு அனுமதி வழங்கிஉள்ளது. முதற்கட்டமாக, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட, பிளாஸ்மா சிகிச்சைக்கு, நல்ல பலன் கிடைத்துள்ளது.
இது குறித்து, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையின் ரத்த வங்கி இயக்குனர், டாக்டர் சுபாஷ் கூறியதாவது:முதற்கட்டமாக, சோதனை முயற்சியாக, 19 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆறு பேர் முற்றிலும் குணமடைந்துள்ளனர். மீதமுள்ள, 13 பேர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.இது குறித்து அறிக்கையை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு அனுப்பி வைத்துள்ளோம். கவுன்சில் ஒப்புதல் கிடைத்ததும், ஓரிரு வாரத்தில், பிளாஸ்மா சிகிச்சை அளிப்போர் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.


AthibAn Tv