அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் சுணக்கம் ஏன்? தவெக அரசுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!
சென்னை: தமிழகத்தில் புதிய அரசுப் பொறுப்பேற்று இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும், அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்கான அரசாணை இன்னும் முழுமையாக வெளியிடப்படாதது குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தவெக அரசின் நிர்வாகக் குளறுபடிகளைச் சாடிப் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அவரது பதிவில், "தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்று 2 மாதங்கள் கடந்த நிலையிலும் கூட, நீதிமன்றங்களுக்கான அரசு வழக்கறிஞர்களின் நியமன அரசாணை இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை. இதன் காரணமாக, நீதிமன்றங்களில் ஜாமீன், முன்ஜாமீன் உள்ளிட்ட முக்கிய மனுக்கள் மீதான விசாரணைகள் பெருமளவில் தடைபட்டுள்ளன. பெரும்பாலான கீழமை நீதிமன்றங்களில் நூற்றுக்கணக்கான வழக்குகள் தேக்கமடைந்துள்ளதாக வரும் செய்திகள், தவெக அரசின் நிர்வாகக் குளறுபடிகளுக்கு மற்றொரு சான்றாக அமைந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
சட்டத்துறை அமைச்சரின் ஒப்புதல்: முதல்வரின் தார்மீகக் கடமை என்ன?
மேலும், இந்த விவகாரத்தில் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாரின் கருத்தையும் நயினார் நாகேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். "அரசு வழக்கறிஞர்களுக்கான அரசாணையை நாங்கள் தற்போதுதான் வெளியிட ஆரம்பித்துள்ளோம் என சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் பொதுவெளியில் பகிரங்கமாக ஒப்புக்கொண்டது பல்வேறு சந்தேகங்களையும் குழப்பங்களையும் எழுப்புகிறது. புதிய வழக்கறிஞர்களின் நியமனம் தாமதமாகிறது என்று தெரிந்த பின்பும்கூட, ஏற்கனவே பணியில் இருந்த அரசு வழக்கறிஞர்களுக்குக் கால நீட்டிப்பு வழங்காதது ஏன்? இந்தச் சுணக்கத்தின் பின்னணி என்ன?" என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
"தமிழகத்தின் அரசு இயந்திரத்தையே முடக்கும் இந்த விவகாரத்தை ஆளும் அரசு ஏன் இத்தனை அலட்சியமாகக் கையாள்கிறது என்பதற்குப் பதில் சொல்ல வேண்டியது முதலமைச்சரின் தார்மீகக் கடமையாகும். அரசு வழக்கறிஞர்களை மட்டுமே நம்பியிருக்கும் ஏழை, எளிய மக்களின் சட்டப் பாதுகாப்புக்கு முதல்வரே பொறுப்பேற்க வேண்டும். எனவே, இந்த நியமனத்தில் உள்ள தடைகளை உடனடியாக ஆராய்ந்து, எவ்வித சமரசமுமின்றி தகுதியான வழக்கறிஞர்களை விரைந்து நியமிக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என நயினார் நாகேந்திரன் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

AthibAn Tv